Atlee Next Project : விஜய் - ஷாருக்கான் மெகா கூட்டணியில் உருவாகும் அடுத்த படம்..அட்லீ கூறியது இதுதான்!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சில வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வரும் அட்லி பாலிவுட்டில் தடம் பதித்துள்ளார்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அட்லி, ஆர்யா, நயன்தாரா ,ஜெய், நஸ்ரியா ஆகியோருடன் இணைந்து ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக கால்தடம் பதித்தார். தமிழ் ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்ட ராஜா ராணி, 100 நாட்களுக்கு மேல் ஓடி, பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.
இதையடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யை வைத்து தனது இரண்டாவது படமான தெறியை இயக்கி மீண்டும் மாஸ் காட்டினார். பின்னர் மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை இயக்கி கமர்ஷியலாக வெற்றி பெற்றார். தனது பயணத்தை தமிழ் சினிமாவுடன் நிறுத்திக்கொள்ளாமல், ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். இப்படத்தின் வசூல் இன்றைய நிலவரப்படி, 700 கோடி ரூபாயை தாண்டியுள்ளது
அட்லி, விஜய்யின் கூட்டணியை மீண்டும் திரையில் காண விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் மேடை நிகழ்ச்சி ஒன்றில், விஜய் வைத்து மீண்டும் படம் இயக்கப் போவதாக இயக்குனர் அட்லி தெரிவித்தார்.
பிகில் திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் ராயப்பன் கதாபாத்திரம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இந்த ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து படம் இயக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து, சினிமா ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்த அட்லி,விஜய்யையும் ஷாருக்கானையும் வைத்து படம் இயக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதைப்பற்றி விஜய்யிடம் பேசியபோது, “கதை பண்ணிட்டு வாங்க அட்லி கண்டிப்பா பண்ணலாம்”என்று விஜய் கூறியதாகவும் ஷாருக்கான் சம்மதம் தெரிவித்ததாகவும், இவர்களின் சம்மதத்துடன் அடுத்த கட்ட பணியை துவங்க போவதாகவும் இயக்குநர் அட்லி விளக்கம் அளித்தார். அட்லியின் அடுத்த படம் விஜய்யுடனா? அல்லது விஜய்- ஷாருக்கானின் மெகா கூட்டணியுடனா? என்ற குழப்பத்தில் சினிமா ரசிகர்கள் உள்ளனர்