AR Rahman Concert : மறக்கமுடியாமா பண்ணிட்டீங்களே.. புலம்பி தள்ளும் மக்களுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்!
கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் பேலஸ் சிட்டியில் ரஹ்மானின் கான்செர்ட் நடக்கவிருந்தது. பின், அது செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டட்து. இந்த முறை, “மறக்குமா நெஞ்சம்”இசை நிகழ்ச்சி திட்டமிட்டது போல் நடந்தது. ஆனால், இதில் கலந்த கொண்ட மக்கள் பல சிரமங்களை சந்தித்துள்ளனர்.
இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ACTC events நிறுவனம் செய்திருந்தது. மதியம் 3 மணி முதல் நகரத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து மக்கள் குவியத்தொடங்கினர். அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலை மார்கமாக நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அடையமுடியாது என்பதால், வாகனங்களை தொலை தூரத்தில் நிறுத்திவிட்டு நடக்கத்தொடங்கியுள்ளனர்.
பல மணி நேரங்களுக்கு பிறகு நுழைவு வாயிலை அடைந்த மக்களை, ACTC events நிறுவனத்தினர் உள்ளே அனுமதிக்கவில்லை.‘உள்ளே, இடம் இல்லை அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளது’என தெரிவித்துள்ளனர்.
ஒதுக்கப்பட்ட இருக்கைகளை விட அதிகளவில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டையும் மக்கள் முன் வைத்துள்ளனர். அத்துடன் அங்குள்ள ACTC events நிறுவனத்தினர், டிக்கெட்டுகளை சரிபார்க்கவில்லையாம். இதனால், கோல்ட் டிக்கெட் பெற்றவர்கள் டைமண்டில் நுழைந்ததாக தங்களின் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
இதனால், ஆயிரக்கணக்கில் செலவிட்டு டிக்கெட் வாங்கிய மக்கள் புலம்பி தள்ளினர். ஒரு சிலருக்கு கூட்ட நெரிசலால், மயக்கம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்களுடன் வந்த சிறுபிள்ளைகளும் ஒரு வழி ஆகிவிட்டனர். மைதானத்தில் வண்டியை நிறுத்தியவர்களிடமிருந்து 50 ரூபாய் வசூல் கட்டணம் பெறப்பட்டுள்ளது. அத்துடன், அங்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சிற்றுண்டி வகைகளும் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
பணம் செலுத்தி டிக்கெட் வாங்கிய பலரும், நிகழ்ச்சியை பார்க்காமலே வீட்டிற்கு திரும்பியுள்ளனர். முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு ACTC events நிறுவனம் மன்னிப்பு கேட்டது. திட்டமிட்டதை விட அதிக ரசிகர்கள் குவிந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும், அனைத்து விதமான சிரமங்களுக்கும் முழு பொறுப்பு ஏற்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ட்வீட்டை ஏ.ஆர்.ஆர் ரீ-ட்வீட் செய்தார்.
இந்நிலையில், “அன்புள்ள சென்னை மக்களே, உங்களில் டிக்கெட் வாங்கியவர்களும், துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் உள்ளே நுழைய முடியாமல் போனவர்களும் தயவுசெய்து உங்கள் டிக்கெட் நகலை உங்கள் குறைகளுடன் arr4chennai@btos.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பகிரவும். எங்கள் குழு விரைவில் பதிலளிக்கும்” என ட்வீட் செய்துள்ளார்.