13 வருட காதலுக்கு பச்சை கொடி காட்டிய அர்ஜுன்; வெளிநாட்டு காதலனை திருமணம் செய்ய போகும் அஞ்சனா!
'நன்றி' படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான ஆக்ஷன் கிங் அர்ஜூன். இதன் பின்னர் கடமை, நாகம், இளமை, வேஷம், எங்கள் குரல், அவன் என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 160க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அர்ஜூன் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், எழுத்தாளர் என்று பன்முக கலைஞராக திகழ்கிறார்.
தற்போது மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். லியோ, விடாமுயற்சி என்று அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து நடித்தார். சமீபத்தில் 'அகத்தியா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்போது, சீதா பயணம், தீயவர் குலைகள் நாடுங்கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போதே நிவேதிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்று 2 மகள்கள் இருக்கின்றனர். அர்ஜூனின் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதியை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்களது திருமணம் நடைபெற்றது. ஐஸ்வர்யா ஒரு சில படங்களில் நடித்துள்ளார். விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதே போன்று சொல்லிவிடவா என்ற படத்தில் நடித்தார். ஆனால், அர்ஜூனைப் போன்று ஐஸ்வர்யாவிற்கு சினிமாவில் போதுமான வரவேற்புகள் இல்லாத நிலையில் அவர் உமாபதியை திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கூட அர்ஜூனின் பிஸினஸ்களை கவனித்து வருகிறார்.
இதே போன்று தான் அர்ஜூனின் இளைய மகளான அஞ்சனாவிற்கு சினிமாவில் ஆர்வம் இல்லையென்றாலும் கூட அவருக்கு பிஸினஸ் மீது நாட்டம் ஏற்பட்டது. அதனால், ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் தான் தற்போது, அஞ்சனாவும் திருமணத்திற்கு தயாராகிவிட்டார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வந்துள்ளார். இப்போது அவரது திருமண புரோபோஷலை ஏற்றுக் கொண்டுள்ளார். அதாவது, காதலனை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஞ்சனாவின் காதலுக்கு அர்ஜூனும் ஓகே சொல்லவே விரைவில் திருமணமும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
அஞ்சனா பகிர்ந்த புகைப்படத்தில் அர்ஜூன் அவரது மனைவியுடனும், ஐஸ்வர்யா அவரது கணவருடனும் இருக்கின்றனர். மேலும், அஞ்சனா தனது காதலருடன் இருக்கிறார். ஆனால், அஞ்சனாவின் காதலன் இத்தாலியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. எனவே தான் தற்போது அனைவரும் குடும்பத்துடன் இத்தாலியில் உள்ளார் என கூறப்படுகிறது. மற்றபடி அர்ஜுனின் வெளிநாட்டு மருமகன் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.