TN 10th Result 2024 : வெளியான 10வது தேர்வு முடிகள்.. எந்த மாவட்டம் முதலிடம்? - முழு விபரம் உள்ளே!
நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் எழுதினர். அவர்களில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 மாணவிகள் மற்றும் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய 260 சிறைவாசிகளில், 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் முதலிடம் : நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில், 97.31 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து சிவகங்கை (97.02%) மற்றும் ராமநாதபுரம் (96.36%) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. வேலூர் மாவட்டம் 82.07% தேர்ச்சியுடன் மாவட்ட அளவில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
பாடவாரியான தேர்ச்சி விகிதம் : நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத்தில் 96.85 சதவிகிதமும், ஆங்கிலத்தில் 99.15 சதவிகிதம் பேரும், கணிதத்தில் 96.78 சதவிகிதம் பேரும், அறிவியலில் 96.72 சதவிகிதம் பேரும் மற்றும் சமூக அறிவியலில் 95.74 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம் : நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணாக்கர்கள் 87.90 சதவிகிதமும், அரசு உதவிப்பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணாக்கர்கள் 91.77 சதவிகிதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகளை சேர்ந்த மாணாக்கர்கள் 97.43 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருபாலர் பள்ளிகள் 91.93 சதவிகிதமும், பெண்கள் பள்ளிகள் 93.80 சதவிகிதமும், ஆண்கள் பள்ளிகள் 83.17 சதவிகிதமும் தேர்ச்சியை பதிவு செய்துள்ளன.
பாடவாரியாக 100-க்கு 100 எடுத்த மாணவர்கள் : நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 8 பேரும், ஆங்கிலத்தில் 415 பேரும், கணிதத்தில் 20 ஆயிரத்து 691 பேரும், அறிவியலில் ஐயாயிரத்து 104 பேரும் மற்றும் சமூக அறிவியலில் நான்காயிரத்து 428 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு மாணவர்கள் வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கான உடனடி துணைத்தேர்வுகள் ஜுலை 2ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.