சில நாட்களுக்கு முன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை, அவரது ஓவல் அலுவலகத்திற்கு சென்று சந்தித்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. இந்த சந்திப்பின்போது வார்த்தைப் போர் ஏற்பட்டு, பெரும் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜெலன்ஸ்கி.


உலகெங்கும் பேசு பொருளாக மாறிய ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு


உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில், அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பான இந்த பேச்சுவார்த்தையின்போது, ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது. உக்ரைனுக்கு உதவியதற்காக நன்றியுடன் செயல்பட வேண்டும் என கூறிய அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா உதவவில்லை என்றால், 2 நாட்களில் உக்ரைனை ரஷ்யா தவிடுபொடியாக்கி இருக்கும் என தெரிவித்தார். அதேபோல், அமெரிக்க முன்னாள் அதிபர் பைடனை விமர்சித்த ட்ரம்ப், அந்த முட்டாள் அதிபர்தான் உங்களுக்கு 350 மில்லியன் டாலர்கள் நிதியை அள்ளி வழங்கிவிட்டார் என ஜெலன்ஸ்கியிடம் கூறினார்.


இதனால் டென்ஷனான ஜெலன்ஸ்கி, தான் நன்றியுடன் இருப்பதாகவும், ஆனால், ரஷ்யா விஷயத்தில் பின்வாங்கப் போவதில்லை என்பதுபோல் பேசினார். இதனால் ட்ரம்ப்பும் டென்ஷனாக, வார்த்தைப்போர் முற்றிய நிலையில், அமைதி ஒப்பந்தத்தில் ஜெலன்ஸ்கி கையெழுத்திட வேண்டும் என ட்ரம்ப் வற்புறுத்தியதால், ஓவல் அலுவலகத்திலிருந்து வெளியேறினார் ஜெலன்ஸ்கி. இந்த சம்பவம் அமெரிக்காவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமே பேசுபொருளாகியுள்ளது. 


மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்த ஜெலன்ஸ்கி


இந்த நிலையில், உக்ரைனின் நிலை குறித்து விவாதிக்க, ஐரோப்பிய தலைவர்கள் கலந்துகொண்ட உச்சிமாநாடு லண்டனில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஜெலன்ஸ்கி, ட்ரம்ப்பை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ளார். உச்சிமாநாட்டிற்குப் பின் பேசிய அவர், உண்மையான பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்று நினைத்து, ஆக்கப்பூர்வமான பேச்சுவாத்தை நடத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அழைத்தால், நான் அங்கு வருவேன் எனக் கூறியுள்ளார்.


ஓவல் அலுவலக சம்பவம் குறித்து தெரிவித்த ஜெலன்ஸ்கி, அந்த சூழ்நிலை கடந்துபோய்விடும் என்று நம்புவதாகவும், இன்னும் முக்கியமான விஷயங்கள் நடக்கவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் எந்த வகையான ஆக்கப்பூர்வமான உறவுக்கும் தயாராக இருப்பதாகவும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.


இந்த உச்சிமாநாட்டில், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து, சண்டையை நிறுத்துவதற்கான திட்டம் ஒன்றை வகுத்து வருவதாகவும், அது முடிந்த உடன், அமெரிக்காவிடம் அந்த யோசனையை தெரிவிக்க உள்ளதாகவும், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.


எது எப்படியோ, உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் முடிவுக்கு வந்தால், அது உலக நாடுகள் பலவற்றிற்கும் நிம்மதியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.