வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, உலகையே திரும்பி பார்க்க வைத்த போராட்டம் என சிக்கலில் தவித்து வரும் இலங்கையில் புதிய அதிபர், பிரதமர் ஆகியோர் பதவியேற்றுள்ளனர். ஜூலை 20ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ரணில் விக்கிரமசிங்க அதிபராக பொறுப்பேற்ற நிலையில், புதிய பிரதமராக 72 வயதான மூத்த அரசியல்வாதி தினேஷ் குணவர்தன இன்று பதவி ஏற்று கொண்டார்.


புதிய அரசு பொறுப்பேற்றதையடுத்து பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. இச்சூழலில், தினேஷ் குணவர்தன குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை கீழே பார்ப்போம்.



  • மஹிந்த, கோட்டபய தலைமையிலான அரசுகளின் கீழ் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் கல்வித்துறை அமைச்சராகவும் இவர் பொறுப்பு வகித்துள்ளார். 

  • இலங்கையின் மூத்த அரசியல்வாதியான தினேஷ் குணவர்தன வெளிப்படையாக பேசக்கூடியவர். 

  • பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ள மஹிந்த ராஜபக்சவின் நம்பிக்கைக்கு உரியவர் என பெயர் பெற்றவர். 

  • கடந்த 2015 முதல் 2019 வரை, மைத்ரிபால சிறிசேனா - ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியை துடிப்புடன் வைத்திருந்தவர். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு ஏற்ப, தற்போது ரணில் அரசிலேயே பிரதமராக பதவி வகிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

  • அமெரிக்காவிலும் நெதர்லாந்திலும் கல்வி பயின்ற தினேஷ் குணவர்தன இலங்கையின் சோசலிசத்தின் தந்தை என அழைக்கப்படும் தனது தந்தை பிலிப் குணவர்தனவைப் போன்று ஒரு தொழிற்சங்கத் தலைவர் ஆவார். 

  • பிலிப் குணவர்த்தனாவின் இந்தியா மீதான அன்பும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான சுதந்திரத்திற்கான முயற்சிகளும் 1920 களின் முற்பகுதியில் அமெரிக்காவில் தொடங்கியது.

  • விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் வி.கே. கிருஷ்ண மேனன் ஆகியோரின் வகுப்புத் தோழராக இருந்துள்ளார். ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை வேண்டும் என தினேஷ் குணவர்தன தொடர்ந்து வாதிட்டு வந்துள்ளார். பின்னர், லண்டனில் இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு கழகத்தை வழிநடத்தினார்.

  • அவரது குடும்பம் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளது என்றும் முழு குடும்பமும் இந்தியாவுக்கு ஆதரவான சார்பு நிலையை கொண்டுள்ளது என்பது பலருக்குத் தெரியாது.

  • பிரதமரின் தந்தை பிலிப்பும் தாய் குசுமாவும் இரண்டாம் உலகப் போரின் போது இலங்கையிலிருந்து (அப்போது பிரிட்டிஷ் காலனி, சிலோன்) தப்பி இந்தியாவில் பதுங்கியிருந்தனர்.

  • விடுதலைக்காகப் யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து போராடிக்கொண்டிருந்த வீரர்களுடன் சேர்ந்து கொஞ்ச காலம் வசித்து வந்திருக்கிறார்கள். 1943 ஆம் ஆண்டில், இருவரும் பிரிட்டிஷ் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பம்பாய் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு வருடத்திற்கு பின்னர் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு யுத்தம் முடிவடைந்த பின்னரே விடுவிக்கப்பட்டனர்.

  • பிலிப், குசுமா இருவரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று பம்பாய் சிறைக்குச் சென்றுள்ளனர். தெற்காசியாவை பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திலிருந்து விடுவிப்பதற்காக இந்தியாவுடனான அவர்களின் தொடர்பு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

  • இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இலங்கையில் உள்ள அவர்களது குடும்ப வீட்டிற்குச் சென்று, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அவர்கள் அளித்த ஆதரவிற்கும், அவர்களின் தியாகத்திற்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தார்.

  • 1948 இல் பிரிட்டனிடமிருந்து இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், பிலிப் மற்றும் குசுமா இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். பிலிப் 1956 இல் மக்கள் புரட்சி அரசாங்கத்தின் ஸ்தாபகத் தலைவராக பதவி வகித்து அமைச்சரவையில் அங்கம் வகித்தார். அவருடைய நான்கு பிள்ளைகளும் கொழும்பு மேயர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்ற உயர் அரசியல் பதவிகளை வகித்துள்ளனர்.

  • தனது பெற்றோரைப் போலவே நல்ல இமேஜைக் கொண்ட தினேஷ் குணவர்தன, 22 வருடங்களுக்கும் மேலாக முக்கிய அமைச்சராக இருந்து, இந்தியாவுடன் சிறந்த உறவை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார்.