World Richest Begger: மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் என்பவர் உலகத்திலேயே பணக்கார பிச்சைக்காரர் என்று சொல்லப்படுகிறார். இவரின் சொத்து மதிப்பு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


இன்றைய கால கட்டத்தில் மனதிற்கு பிடித்த வேலை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.  அப்படி நல்ல வேலை கிடைத்தும், கை நிறைய சம்பளம் வாங்கியும் மாதம் ஒரு 1,000 ரூபாய் சேமித்து வைக்க முடியாத நிலையில் பலர் இங்கு உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில், பிச்சை எடுப்பதை ஒரு வேலையாக வைத்து, ஒரு பங்களாவை கட்டியுள்ளார் ஒரு நபர். நாம் விளையாட்டாய் கூறுவது போல, நாள்தோறும் பிச்சை எடுப்பதையே தொழிலாக வைத்துள்ளார் மும்பையைச் சேர்ந்த ஒரு நபர். இவர்தான் உலகத்திலேயே மிகப் பெரிய பணக்கார பிச்சைக்காரர் என்று சொல்லப்படுகிறார்.


யார் இந்த நபர்?


மும்பையைச் சேர்ந்தவர் ஜெயின். இவர் தனது மனைவி, இரண்டு குழந்தைகள், அண்ணன் மற்றும் தந்தையுடன் பாரல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருடைய குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்து, பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர். இவரின் முழுநேர வேலை பிச்சை எடுப்பதுதான். ஆனால் இவர்களது குடும்பத்தினர் ஜெயின் பிச்சை எடுப்பதற்கு மறுத்துள்ளனர்.


இருப்பினும், இவர் நாள்தோறும், மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் ஆசாத் மைதானம் பகுதிகளில் பிச்சை எடுத்து வருகிறார். பிச்சைக்காரர்கள் என்றாலே வறுமையும், சோர்வும், கிழிந்த ஆடைகளையும், அழுக்கான தேகத்தையும் கெண்டவர் என்கிற எண்ணம் தான் நமக்கு வரும். ஆனால் பாரத் ஜெயின் நிலைமை வேறு.  இவரின் சொத்து மதிப்பு அனைவரையும் வாயை பிளக்க வைக்கிறது.


சொத்து மதிப்பு எவ்வளவு?


இவரின் மாத வருமானம் சுமார் 60,000 முதல் ரூ.75,000 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. சுமார் 1.5 கோடி மதிப்புள்ள இரண்டு அறை (2BHK) கொண்ட பிளாட் ஒன்று இவருக்கு மும்பையில் சொந்தமாக உள்ளது. மேலும், தானே பகுதியில் இரண்டு கடைகளை வாடைகைக்கு விட்டுள்ளார். இந்த கடை மூலம் இவருக்கு மாதம் ரூ.30,000 கிடைக்கிறது. இவர் ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்கிறார். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு சுமார் 2,000 முதல் 2,500 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். மொத்தத்தில் பாரத் ஜெயினின் சொத்து மதிப்பு ரூ.7.5 கோடி என்று சொல்லப்படுகிறது. 


இவரை போன்று, கொல்கத்தாவைச் சேர்ந்த லட்சுமி, தனது 16-வது வயதில் இருந்தே பிச்சை எடுத்து வருகிறார். இதேபோல மும்பையைச் சேர்ந்த கீதா சார்னி என்பவரும் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளது. இவர் ஒரு நாளைக்கு 1,500 முதல் 2,500 ரூபாய் வரை சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.