உணவின்றி உலகம் இயங்க முடியாது என்பது நிதர்சனம். ஆனால் உயிர்களைக் காக்கும் உணவுப் பாதுகாப்பு இப்போது உலகளவில் கேள்விக்குறியாகி வருகிறது என்பதுதான். உணவுப் பாதுகாப்பு என்பது உணவை சமைத்தல், சேமித்தல், அதை விநியோகித்தல் ஆகியனவற்றை உள்ளடக்கியதாகும்.


உணவுப் பாதுகாப்பு என்பது உணவினால் ஏற்படும் நோய்களைத் தடுப்பதையும் சேர்த்தே உள்ளடக்கியுள்ளது. ஏனெனில் உணவில் உள்ள சில பேத்தோஜன்ஸ், நச்சுப் பொருட்கள் உடல் நிலையைப் பாதிக்கும்.


உணவு சார்ந்த ஒவ்வாமை, நோயினால் ஆண்டுதோறும் 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர் என்றோர் புள்ளி விவரத்தை உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது.
ஆண்டு தோறும் உலக உணவுப் பாதுகாப்பு தினமானது ஜூன் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உணவின் தரத்தை பேணுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.


உணவுப் பாதுகாப்பு நாள் 2023: கருப்பொருள்
இந்த ஆண்டின் உணவு பாதுகாப்பு நாளுக்கான கருப்பொருள், உணவின் தரம் உயிர்களைக் காக்கும் என்பதே ஆகும். பெரும்பாலான மக்கள் உணவின் தரத்தை அதன் பாக்கெட்டுகளில் உள்ள சில தகவலின்களின் அடிப்படையில் தான் நம்புகின்றனர். ஆதலால் உணவுப் பாதுகாப்பு தரக் குறியீடானது விவசாயிகள் மற்றும் உணவுப் பதுப்படுத்துதல் துறையில் உள்ளவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கும். உணவுப் பதப்படுத்துதலில் எவ்வளவு தூரம் அடிட்டிவ்ஸ் சேர்க்கலாம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தும் முறை, அளவு என எல்லாமும் உணவுப் பாதுகாப்பின் கீழ் வரும். 


உணவு பாதுகாப்பு நாள் வரலாறு:
 ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையால் 2018ல் அறிமுகப்படுத்தப்பட்ட உலக உணவுப் பாதுகாப்பு தினம் உலகெங்கிலும் சில உணவால் பரவும் நோய்களைத் தடுத்து இறுதியில் அவற்றை ஒழிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இது WHO மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூட்டு முயற்சி ஆகும். உலகளவில் உணவு மூலம் பரவும் நோய்களால் ஏற்படும் சுகாதார அபாயங்களை அகற்ற பிற உறுப்பு நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.


உலக உணவு பாதுகாப்பு தினத்தின் முக்கியத்துவம்:


சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மிக மோசமான தேவை கொரோனா நெருக்கடியில் நிலவுவதை போல முன்னெப்போதும் இருந்ததில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது, உணவுப்பழக்க நோய்கள் பரவுவதை அகற்றுவது, விவசாய களங்களில் ஆரோக்கியமான, சுகாதாரமான நடைமுறைகளை வளர்ப்பது, சந்தை மற்றும் உணவு பரிவர்த்தனைகளை உள்ளடக்கிய எல்லா இடங்களிலும் இது மிகவும் இன்றியமையாததாகிவிட்டது.


போதுமான அளவு பாதுகாப்பான உணவைப் பெறுவது வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கும் நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியமாகும். உற்பத்தி முதல் அறுவடை, பதப்படுத்துதல், சேமிப்பு, விநியோகம், தயாரித்தல் மற்றும் நுகர்வு வரை - உணவுச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் உணவு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில் உணவுப் பாதுகாப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதை உரக்கச் சொல்லவே இந்த தினம் என்பதை நாமும் புரிந்து கொள்வோம்.