சுற்றுச்சூழல் :


நம்மையும் நம்மை சுற்றியிருக்கும் இயற்கையான சூழலான  மரம் , செடி , கொடி , பிற உயிர்கள் அனைத்தையும் சுற்றுச்சூழல் என அழைக்கிறோம்.18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிற்புரட்சி தொடங்கி, புவி வெப்பமடைதல், காற்று, நீர் மற்றும் நிலத்தின் மாசுபாடு மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற பரவலான சுற்றுச்சூழல் பாதிப்புகளை மனிதன் ஏற்படுத்த துவங்கிவிட்டான்.



சுற்றுச்சூழல் தினத்தின் அவசியம் :


நமது இயற்கைக்கு  மனிதனால் ஏற்படும் ஆபத்துக்களை எடுத்துரைக்கவும், அதைப் பாதுகாக்க மக்களை வலியுறுத்தவும்தான் சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day )கொண்டாடப்படுகிறது.





உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day ): வரலாறு


உலக சுற்றுச்சூழல் தினம் 1972 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மனித சுற்றுச்சூழலுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.  ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) தலைமையிலான வருடாந்திர நிகழ்வு, ஜூன் 5, 1973 இல் முதன்முதலில்  கடைப்பிடிக்கப்பட்டது. ஜூன் 5ஆம் தேதி தொடங்கிய மாநாடு ஜூன் 16ஆம் தேதி வரை நடைபெற்றது . 1987 முதல், இந்த நிகழ்வு பல்வேறு நாடுகளில் சுழற்சி அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, உலக சுற்றுச்சூழல் தினம் ஸ்வீடனில் நடைபெறுகிறது. 50 ஆண்டுகால நிறைவையடுத்து இது Stockholm+50. என அழைக்கப்படுகிறது.



தீம் :


இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினக் (World Environment Day ) கொண்டாட்டத்திற்கான கருப்பொருள் ‘ஒரே ஒரு பூமி.’ இதுவே 1972 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மாநாட்டின் முழக்கமாகவும் இருந்தது, இது ம‌னித செயல்கள் நமது சுற்றுச்சூழலுக்கு மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்துவதால், நமது உயிர்க்கோளத்திற்கு மேலும் சேதம் ஏற்படுவதைக் குறைக்க அல்லது தடுக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது என்பதை வலியுறித்துகிறது.




நோக்கம் :


மனித நடவடிக்கைகளால் வெளிவரும் பசுமை இல்ல வாயுக்கள் உலக வெப்பநிலையை பாதுகாப்பற்ற நிலைக்கு உயர்த்கதுகின்றன.பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்துவது கடவாழ் உயிரினங்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பது நாம் அறிந்ததே. இது மனித இடமாற்றத்திற்கு வழிவகை செய்யலாம். அதே நேரம் புவியில் உள்ள தாவரங்கள் , விலங்குகள் , பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் அழியும் அபாயமும் உள்ளது. இது மனித அழிவிற்கு வித்தாக அமையும். எனவே  உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day)நமது பூமியைப் பாதுகாக்க சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது