ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் – ஜூலை 30


தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau)  கடந்த நான்காண்டுத் (2016 -2019) தரவுகளின் சராசரி அடிப்படையில், இந்தியாவில் கடத்தப்பட்டவர்களில், 92 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் (53% பேர் குழந்தைகள்  மற்றும் 39% பெண்கள்). இதில் கட்டாய உழைப்புக்காக 28% பேர் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த 31 சதவீதம் பேர் கடத்தப்படுகிறார்கள்.



கட்டுரையாளர் : டாக்டர் பாலமுருகன், மனித உரிமை செயற்பாட்டாளர்


மனிதக் கடத்தல் (Human Trafficking) அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், பெரும்பாலான மக்களுக்கு அது குறித்தப் புரிதல் இல்லை.  ஆங்கிலத்திலுள்ள, Kidnapping  / child-lifting, Abduction, trafficking and smuggling போன்றப் பல்வேறு வார்த்தைகளுக்கும்,  தமிழில் “கடத்தல்” என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. ஆனால்,  சட்டத்தின் பார்வையில் இவையனைத்தும் வெவ்வேறு அர்த்தங்கள் உடையவை. இவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் குறித்தத் தெளிவு இருந்தால் மட்டுமே, மனிதக் கடத்தலைத் (human Trafficking) தடுக்கவும், கடத்தலால் பாதிக்கப்படுபவர்களுக்கு   உதவவும் முடியும். 


இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 359-இன்படி, குழந்தைக் கடத்தல் என்பது இரண்டு வகைப்படும்: 1) இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லுதல்; 2) சட்டபூர்வமானப் பாதுகாவலரிடம் இருந்துக் கடத்திச் செல்லுதல். பிரிவு 360 -இன்படி, ஒருவருடைய சம்மதம் இல்லாமல் அல்லது அவருடைய சார்பில் சட்டப்பூர்வமாக சம்மதம் தர அங்கீகரிக்கப்பட்ட நபரின் சம்மதம் பெறாமல் இந்திய எல்லையைக் கடந்து கடத்திச் செல்வது இந்தியாவிலிருந்துக் கடத்திச் செல்லுதல் ஆகும்; பிரிவு 361 -இன்படி, சட்டப்பூர்வமானப் பாதுகாவலரிடம் இருந்து அவரின் சம்மதம் பெறாமல் 16 வயதிற்குரிய ஓர் ஆண் அல்லது 18 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணை அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபரை தூக்கிக் கொண்டு அல்லது கவர்ந்து சென்றால் அது சட்டபூர்வமான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி செல்வது (Kidnapping) ஆகும்; கடத்தப்பட்ட நபரின் ஒப்புதல் முக்கியமற்றது; பாதுகாவலர் என்ற சொல், தாய் / தந்தை உட்படக் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள எவரையும் குறிக்கும். முறைகேடாகப் பிறந்தக் குழந்தைக்கு, தான் தகப்பன் என்ற நல்லெண்ணத்துடன், அந்தக் குழந்தையை எடுத்துச் செல்வது இந்தப் பிரிவின் கீழ் குற்றம் ஆகாது எனவும் கூறப்பட்டுள்ளது.  இந்த வரையறையின்படி, அனாதைக் குழந்தைகளைக் கடத்திச் சென்றால் இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது.  மைனரை கடத்திச் சென்றால் குற்றம் செய்தவரின் நோக்கம் ஒரு பொருட்டல்ல.  மருத்துவமனையில் இருந்து /  பெற்றோர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு தெரியாமல் குழந்தைகளை தூக்கிச் செல்வது (Child Lifting) இந்தப் பிரிவின் கீழ் வரும்.


 


கடத்தல் (Abduction) என்பது கடத்தப்பட்ட நபரைக் குறிக்கிறது. அவர் எந்த பாதுகாவலரின் பராமரிப்பிலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வன்முறையாலோ அல்லது ஏமாற்றக்கூடிய முறைகளாலோ, ஒருவரை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்லும்படி கட்டாயப்படுத்துவது கடத்திச் செல்லுதல் (Abduction) எனப்படும் என பிரிவு 362 வரையறை செய்கிறது. கடத்தல் (abduction) என்பது ஒரு துணைச் செயல் மற்றும் அது தானே தண்டனைக்குரியது அல்ல. எனவே, இந்திய தண்டனைச் சட்டத்தில்   இதற்கு பொதுவான தண்டனை எதுவும் இல்லை. கடத்தலில் கடத்தப்பட்டவர்கள் ஒப்புதல் மற்றும்  கடத்தியவர்களின் நோக்கம் குற்றத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.   இந்தியத் தண்டனைச் சட்டத்தில், பிச்சை எடுக்க (பிரிவு 363-A), கொலை செய்ய அல்லது பலிகொடுக்க (பிரிவு 364), பணத்திற்காக (பிரிவு 364-A), ஒரு பெண்ணைப் பலாத்காரமாக வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க (பிரிவு 366), கட்டாயப் புணர்ச்சியில் ஈடுபடுத்த (பிரிவு 366 A), முறைகேடானப் புணர்ச்சியில் ஈடுபடுத்த 21 வயதுக்குட்பட்டப் பெண்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தல் (பிரிவு 366 B), கொடுங்காயம் உண்டாக்க அல்லது அடிமைத்தனத்தில் ஈடுபடுத்த அல்லது இயற்கைக்கு மாறான இச்சைக்குப் பலியாக்க (பிரிவு 367),  10 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தையை அது அணிந்திருக்கும் பொருட்களைத் திருட (பிரிவு 369), பாலியல் தொழிலில் ஈடுபடுத்த 18 வயதுக்குட்பட்ட நபரை விற்பது அல்லது வாடகைக்கு விடுவது (பிரிவு 372), போன்ற நோக்கங்களுக்காக கடத்தப்படுவது குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது.


பணம் அல்லது வேறு ஏதேனும் பொருள் பலனுக்காக ஒரு நாட்டின் குடிமகன் அல்லாத ஒருவரை, வேறொரு நாட்டில், அந்த நாடுகளின் குடியுரிமைச் சட்டங்களுக்கு விரோதமாக நுழைவதற்கு அழைத்துச் செல்லுதல் மனிதக் கடத்தல் (Human Smuggling). உதாரணமாக இலங்கையில் போர் நடந்த பொழுது பலரும் பணம் கொடுத்து படகுகளில் வந்து  இந்தியாவில் இறங்கினர். பொதுவாக human smuggling  என்பது, ஒரு நாட்டின் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதை குறிக்கும்.  ஆகவே ஒரு நாட்டுக்குள் சட்டவிரோதமாக அல்லது மோசடியான ஆவணங்கள் மூலம் ரகசியமாக சுய விருப்பத்துடன் நுழைய விரும்பும் ஒருவர் போக்குவரத்துக்காக வேறு ஒருவரின் உதவியை குறிப்பிட்டப் பணத்தைக் கட்டணமாக கொடுத்து பெறுவார். போக்குவரத்து வசதி செய்து தருபவர் அடுத்த நாட்டின் எல்லைக்குள் சட்டவிரோதமாக சென்று இறக்கி விடுவார். கட்டணத்தைப் பெற்றுக்கொண்ட உடன் இருவருக்கும் எந்த தொடர்பும் இருக்காது. ஆனால், மனிதக் கடத்தல் (human trafficking) மேற்சொன்னவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆகவே, இதை நாம் சட்டத்தின் பார்வையில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.


மனிதக் கடத்தல் (Human Trafficking) – வரையறை


இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி 23(1) மனிதக் கடத்தலை முற்றிலுமாக வெளிப்படையாகத் தடை செய்கிறது. கடத்தப்படுவதற்கு எதிராக ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். இருந்தபோதிலும், ஒரு விரிவான வரையறை கடந்த 2013 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குற்றவியல் திருத்தச் சட்டத்தில் பிரிவு 370-இல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, யார் ஒருவரையும் சுரண்டும் நோக்கத்திற்காக, ஆட்களைச் சேர்ப்பது (Recruit),அழைத்துச் செல்வது (Transport), அடைக்கலம் கொடுப்பது (harbour), இடம் மாற்றுவது (transfer) ஒரு நபர் அல்லது நபர்களை பெறுவது (Receive) போன்றவை, அச்சுறுத்தல்களைப்  பயன்படுத்துதல் அல்லது, கட்டாயப்படுத்துதல் அல்லது வேறு ஏதேனும் வகையிலான வற்புறுத்தல்கள் அல்லது, கடத்தல் மூலம் அல்லது, மோசடி/ ஏமாற்றுதல் அல்லது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துதல் அல்லது பணம் அல்லது சலுகைகள் கொடுப்பது அல்லது பெறுவது உட்பட,  பெறப்படும் நபரைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நபரை தூண்டுவது மூலமாகச் செய்யப்படும்,  ஆட்சேர்ப்பு, அழைத்துச் செல்லுதல், அடைக்கலம் கொடுத்தல், இடம் மாற்றுதல் அல்லது பெறுதல்  ஆகியவை செய்யப்பட்டால் அது மனிதக் கடத்தல் குற்றமாகும்.  சுரண்டல் என்பதில் உடல்ரீதியான சுரண்டலுக்கு உட்படுத்தும் எந்தச் செயல்பாடுகளும், எல்லா வடிவிலான பாலியல் சுரண்டல்கள், அடிமைமுறை அல்லது அடிமைத்தனத்திற்கு சமமான நடைமுறைகள், அடிமைத்தனம் அல்லது கட்டாயமாக உறுப்புகளை அகற்றுதல் அனைத்தும் அடங்கும். கடத்தல் குற்றத்தை நிர்ணயிப்பதில், பாதிக்கப்பட்டவரின் சம்மதம் ஒரு பொருட்டாகாது / முக்கியமற்றது.


மனித கடத்தல் - தவறான கருத்துக்கள்  மற்றும் உண்மை நிலவரம்  


மனித கடத்தல் குறித்து சில தவறான கருத்துக்களும், புரிதல்களும் காணப்படுகிறது.  ஆகவே உண்மை நிலவரம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.  கடத்துபவர்கள் அவர்களுக்குத் தெரியாதவர்களைக் குறிவைத்துக் கடத்துகிறார்கள்: உண்மையில் பெற்றோர், உறவினர்கள், காதல் / வாழ்க்கைத்துணை போன்றோர் கடத்தலுக்கு உடந்தையாக அல்லது கடத்துபவர்களாக இருக்கிறார்கள். காதல் என்ற பெயரில் இளம்பெண்களை வசப்படுத்தி திருமணம் செய்துகொள்கிறேன் என்று அழைத்துச் சென்று பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்டது, மீட்கப்பட்டவர்கள் மூலம் தெரியவந்துள்ளது. பெரும்பாலான நேரங்களில் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கிறோம் என்ற புரிதல் இல்லாமல், பெற்றோர் / உறவினர்கள் கடத்துவதற்கு உதவியாக இருக்கிறார்கள்.


தொழிலாளர்களைக் கடத்துதல் என்பது வளரும் நாடுகளில் மட்டுமே பிரச்சினையாக உள்ளது: உண்மையில் வளர்ந்த நாடுகளிலும் வேலைக்காக கடத்தும் சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் பெரும்பாலும், பாலியல் கடத்தலை விட குறைந்த அளவிலேயே கண்டறியப்படுகிறது. வேலைக்காக கடத்தப்படுவது பெரும்பாலும் புலம் பெயர்தல் (Migration) என்ற பெயரில் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது.


கடத்தப்படும் நபர்கள் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக ஒரு இடத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள் அல்லது அந்த சூழலை விட்டு வெளியேற முடியாமல் பூட்டப்பட்டு இருப்பார்கள்: உண்மையில் சில நேரங்களில் இது போல் நடக்கலாம். ஆனால் பெரும்பாலான நேரங்களில், சூழல் காரணமாக வேறு வழியின்றி அவர்கள் விருப்பத்துடன் இருக்கிறார்கள். வேறு ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பாதுகாப்பு கருதி வெளியே சொல்லத் தயங்குவார்கள். பல நேரங்களில் அவர்கள் கடத்தப்பட்டு இருக்கிறார்கள் என்ற புரிதலே அவர்களுக்கு இருக்காது.


கடத்தப்பட்ட நபர் சுய ஒப்புதலின் அடிப்படையில் நன்றாகத் தெரிந்தே ஒரு சூழலில் இருக்க சம்மதிப்பது கடத்தல் ஆகாது: இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 370 இன் படி கடத்தப்படுபவர்களின் சம்மதம் ஒரு பொருட்டாகாது. சுரண்டும் நோக்கில் செய்யப்படும் செயல்பாடுகள் அனைத்தும் குற்றமே. மேலும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் தொழிலில் அவர்கள் சம்மதத்துடன் ஈடுபடுத்தினால் சட்டப்படி குற்றம்.


மனிதக் கடத்தல் என்பது சட்டவிரோதமான தொழில்களில் மட்டுமே நிகழ்கிறது: உணவகங்கள் கட்டுமானத் தொழில்கள், செங்கல் சூளைகள், தொழிற்சாலைகள் மற்றும் பல தொழில்களில் கடத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளன. மனித கடத்தல் என்பது ஒரு நபரை மாநில, மாவட்ட அல்லது தேசிய எல்லைகள் தாண்டி அழைத்துச் செல்வதைக் குறிக்கும். உண்மையில் மனித கடத்தல் என்பதும், smuggling என்பதும் வெவ்வேறு செயல்கள்.   ஒரு ஊரின் எல்லையில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை ஒரே ஊருக்குள்ளேயே மனிதக் கடத்தல் நடைபெறலாம்.


பெண்கள் மட்டும் பெண் குழந்தைகள் மட்டுமே பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுகிறார்கள்: உண்மையில் ஆண் குழந்தைகளும், ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலும் இவர்கள் அடையாளம் காணப்படுவதில்லை. அப்படியே கண்டறியப்பட்டாலும் புகார்களாக பதியப்படுவதில்லை. LGBTQ சிறுவர்களும் இளைஞர்களும் கடத்தல் பாதிப்புக்கு உள்ளாகிறவர்களாகவே இருக்கிறார்கள். கடத்தல் என்பது பொதுவாக அல்லது எப்பொழுதும் ஒரு வன்முறை குற்றமாக இருக்கிறது: உண்மையில் பெரும்பாலான மனித கடத்தல்காரர்கள் சுரண்டும் எண்ணத்துடன் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுதல், மோசடி மற்றும் அச்சுறுத்தல் போன்ற உளவியல் ரீதியான வழிகளை கையாளுகின்றனர். தந்திரமாக பேசி அவர்களின் சம்மதத்துடன் அழைத்துச் செல்கிறார்கள்.


எல்லாக் கடத்தல்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த நடத்தப்படுகிறது: பாலியல் தொழில் தவிர வேறு வேலைகளுக்காகவும், பிச்சை எடுக்க, உடல் உறுப்புகளை மாற்ற, வாடகைத்தாய், விளையாட்டுகளில் ஈடுபடுதல், போதைப்பொருள் கடத்த, எனப் பல காரணங்களுக்காக கடத்தப்படுகிறார்கள்.

பாலியல் தொழிலில் உள்ள அனைவரும் கடத்தப்பட்டவர்கள்: 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டால், சட்டப்படி கடத்தப்பட்டவர்களாகக் கருதலாம். ஆனால் 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் அனைவரையும் கடத்தப்பட்டவர்களாகக் கருத முடியாது.  மேலும் ஏமாற்றுதல், கட்டாயப்படுத்துதல் மூலம் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக ஈடுபடுத்தப்பட்டு இருந்தால் மட்டுமே கடத்தப்பட்டவர்களாகக் கருதமுடியும்.


 


அறிகுறிகள்


கடத்தப்பட்டவர்களை அறிகுறிகள் மூலம் இனம் காணமுடியும். நமக்கு நன்றாகத் தெரிந்தவர்கள் நமக்கு அருகில் வசிப்பவர்கள் மற்றும் உறவினர்கள் கடத்தப்படுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள கடத்தல் குறித்த வரையறையும் சில அறிகுறிகளும் நமக்கு உதவியாக இருக்கின்றது. அனைத்து அறிகுறிகளும் எல்லோருக்கும் பொருந்த வேண்டிய அவசியமில்லை. என்ன நோக்கத்திற்காக கடத்தப்பட்டார்கள், என்ன சூழலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள், ஏன் கடத்தினார்கள், எப்படி கடத்தப்பட்டார்கள் போன்ற காரணிகளைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். 



வேலை மற்றும் வாழும் சூழல் சார்ந்த அறிகுறிகள்


பொதுவாக கடத்தப்பட்டவர்கள் சுதந்திரமாக அவர்கள் விருப்பப்படி எங்கும் சென்று வர முடியாது; குறைவான ஊதியம் / ஊதியம் வழங்காமல் உணவு மட்டும் பெறும் சூழலில் வசித்தல்;  நீண்ட நேர வேலை மற்றும் விடுமுறை இன்றி உழைக்க கட்டாயப்படுத்துவது; கடன் பெற்றுச் செலுத்த முடியாமல் வறுமைச் சூழலில் சிக்கித் தவிப்பது; தவறான வாக்குறுதிகள் தந்து  வேலைக்கு சேர்க்கப்படுவது; வேலை மற்றும் தங்கும் இடங்களில் குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லாத நிலை - கழிவறை வசதி, மின்சார வசதி, காற்றோட்ட வசதி, உணவு வசதி போன்றவை; அதிகமாக கண்காணிக்கப்படுவது; உடல் மனம் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள்; பணி இடத்திலேயே தங்கி இருத்தல்; போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஆபத்தான வேலைகளில் ஈடுபடும் சூழல்; நேரடியாக ஊதியம் பெறாமல் மற்ற நபர் மூலம் பெறுவது; இதுபோன்ற வேலைச் சூழலில் இருப்பவர்கள் பெரும்பாலும் கடத்தப்பட்டவர்களாகவும் கொத்தடிமைகளாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.


 தனிநபர் சார்ந்த அறிகுறிகள்


கடத்தப்பட்டவர்களுக்கு பொதுவாக பயம், கவலை, மனச்சோர்வு, மன இறுக்கம், பதட்டம், நம்பிக்கையின்மை போன்ற மனநலம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கும்;  சிலர் போதைப் பொருட்கள் அதிகம் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள்; ஊட்டச்சத்துக் குறைபாடு, மோசமான உடல் நலம் மற்றும் சுகாதாரம்; தனிப்பட்ட உடைமைகள் மிகவும் மிகவும் குறைவாக இருப்பது; அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள் வேறொருவர் கட்டுப்பாட்டில் இருப்பது; அவர்கள் பிரச்சினைகளுக்காக பேச முடியாத நிலைமை; தங்கியிருக்கும் முகவரியைத் தெளிவாகக் கூற இயலாது; நேர உணர்வின்மை மற்றும் முன்னுக்குப் பின் முரணாக பேசுதல் போன்ற அறிகுறிகள் அடிப்படையில் கடத்தப்பட்டவரை இனம் காணமுடியும். இந்த அறிகுறிகளை தனித்தனியாக பார்க்காமல் அவர்கள் இருக்கும் சூழலுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். உதரணமாக தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களின் சான்றிதழ்களை பெறுவது வழக்கம். அதற்காக அவர்களை கடத்தப்பட்டவர்களாகக் கருதக்கூடாது.


மேற்சொன்ன அறிகுறிகள் அனைத்தும் கொத்தடிமையாக இருப்பவர்களுக்கும் பொருந்தும். இந்த வரையறைகளையும், அறிகுறிகளையும் புரிந்துகொண்டால் மட்டுமே நம்மால் மனிதக் கடத்தலைத் தடுக்க முடியும்.  இது குறித்து நாம் புரிந்து கொண்டு, மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது,  நாம் வசிக்கும் பகுதிகளில் சமுதாயம் சார்ந்த கண்காணிப்பை மேம்படுத்துவது, பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பெண்கள் குழந்தைகளை இனம் கண்டு அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவி செய்வது, கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை   மீட்பது, அவர்களுக்கு சட்ட உதவி செய்வது,  மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வது, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்  தருவது போன்ற பல்வேறு செயல்பாடுகளில் நமது பங்களிப்பை சிறப்பாக செய்ய முடியும்.  மனிதக் கடத்தலைத் தடுப்பது அரசின் கடமை மட்டுமல்ல; நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட்டால்,  தமிழகத்தை மனித கடத்தலற்ற மாநிலமாக மாற்ற முடியும்.