எர்த் ஓவர்சூட் டே (Earth Overshoot Day ) இப்படி ஒரு தினம் கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இன்றைக்கு (ஜூலை 29 ஆம் தேதி) இந்த தினம் பதிவாகியிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை திரும்பியுள்ளது. இதனை இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (World Wide Fund for Nature) கணித்துக் கூறியுள்ளது.
நாம்வாழும் பூமி நமக்கு எல்லா கொடைகளையும் வழங்கி வருகிறது. எவ்வளவு தான் நாம் தீங்கிழைத்துக் கொண்டிருந்தாலும் கூட கருணை மார்பில் சுரக்கும் பால் போல பூமி இன்றளவும் வளங்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வளங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்று என்றாவது யோசித்துப் பார்த்திருக்கோமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதனால் தான் இப்படி ஒரு தினத்தைக் கொண்டாட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
ஆம், பூமி நமக்கு அருளும் வளங்களில் அளவுக்கு அதிகமாக நாம் பயன்படுத்துவதையே எர்த் ஓவர் சூட் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் இவ்வளவுதான் இயற்கையின் வளங்களை உபயோகிக்கலாம் என்ற நியதி இருக்கிறது. ஆனால், மனிதகுலம் அந்த வளத்தை தீர்த்த தேதியை எர்த் ஓவர்ஷூட் நாள் எனக் கூறுகிறோம். ஆண்டின் பிற்பகுதியில், பற்றாக்குறையுடன் நாட்களைக் கடத்துகிறோம். இதனால் நாம் ஓவர்ஷூட்டில் செயல்படுகிறோம். அதாவது பட்ஜெட்டை தாண்டி விழும் பற்றாக்குறை போல் பூமியின் வளத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்திவிட்டு எஞ்சிய நாட்களை பற்றாக்குறையில் கழிப்பது தான் இந்தச் சூழல். 1970-களிலேயே உலக மக்கள் பூமியின் வளங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் எல்லையைக் கடந்துவிட்டனர் எனக் கூறுகிறது ஐக்கிய நாடுகள் சபையில் புள்ளிவிவரம்.
2019-ஆம் ஆண்டில் இந்த தினம் அனுசரிக்கப்படத் தொடங்கியதில் இருந்ததைவிட இப்போது இந்த சுரண்டல் இன்னுமே அதிகரித்துள்ளது எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் வனப் பரப்பளவில் 0.5% குறைந்துள்ளது. இதற்கு அமேசான் காடுகளில் மேற்கொள்ளப்பட்ட வன அழிப்பு நடவடிக்கைகளும் காரணம். அமேசான் காடுகளின் பெரும் பகுதி பிரேசில் நாட்டில் தான் உள்ளது. இதில் 1.1 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு பிரேசில் உள்ளது. 2021ல் காடுகள் அழிப்பு 43 சதவீதமாக அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இத்துடன் கரியமில வாயு வெளியேற்றமும் பூமிக்கு சேதாரம் ஏற்படுத்துகிறது. ஆனால், கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் சாலைப் போக்குவரத்து மற்றும் வான்வழிப் போக்குவரத்தால் ஏற்பட்ட கார்பன் டைஆக்ஸைடு வெளியேற்றம் குறைந்துள்ளது. ஊரடங்கால் இது நடந்துள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்தால் ஏற்படும் மாசு 33 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.
ஆனால், உலக நாடுகள் பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயற்சி செய்வதால் சர்வதேச அளவில் நிலக்கரி பயன்பாடு அதிகரித்து ஒட்டுமொத்த கார்பன் படிமங்களின் பயன்பாடு 40% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவுகளை வீணடிப்பதைத் தவிர்த்தல், போக்குவரத்தை குறைத்தல், தொழில்துறைக்காகவும் கட்டிடங்களுக்காகவும் வனங்களை அழிக்காமல் இருத்தல் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சர்வதேச அமைப்புகள் தெரிவிக்கின்றன.