உலகின் பிரகாசமான மாணவர்கள் பட்டியலில் இந்திய அமெரிக்க பள்ளி மாணவி இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த திறமையான இளைஞர்களுக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையம், இந்த மாணவர் பட்டியலை தயார் செய்துள்ளது.
தரநிலை தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 76 நாடுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் இருந்து புத்திசாலியான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நடாஷா பெரியநாயகம் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்லார்.
அமெரிக்கா நியூ ஜெர்சி மாகாணத்தில் புளோரன்ஸ் எம் கவுடீர் நடுநிலைப்பள்ளியில் மாணவராக உள்ளார் நடாஷா. 5ஆம் வகுப்பு மாணவியாக இருந்தபோது, 2021ஆம் ஆண்டு, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சென்டர் ஃபார் டேலண்டட் யூத் (CTY) தேர்வை எழுதினார்.
தேர்வின் வெர்பல் மற்றும் குவான்டிடேட்டிவ் பிரிவில் எட்டாம் வகுப்பு மாணவருக்கு இணையாக நடாஷா மதிப்பெண்கள் எடுத்திருந்தார். இதனால், அந்தாண்டு கெளரவ பட்டியலில் அவர் பெயர் இடம்பெற்றது. இந்த ஆண்டு, SAT, ACT, பள்ளி மற்றும் கல்லூரி திறன் தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை எடுத்து பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
நடாஷா பெரியநாயகத்தின் பெற்றோர் சென்னையை சேர்ந்தவர்கள். பட்டியலில் இடம்பெற்ற நடாஷா, "ஓய்வு நேரத்தில், ஜே.ஆர்.ஆர் டோல்கீனின் நாவல்களை படிப்பதையும் டூடுலிங் வரைவதையும் விரும்புவேன்" என்கிறார்.
உலகில் சிறந்து விளங்கும் மாணவர்களை அடையாளம் கண்டு, கல்வி ரிதியாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சென்டர் ஃபார் டேலண்டட் யூத். CTY தேர்வில் கலந்து கொண்டவர்களில் 27 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே பிரகாசமான மாணவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அதில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களில் நடாஷா பெரியநாயகமும் ஒருவர். இதுகுறித்து CTY நிர்வாக இயக்குநர் டாக்டர். ஏமி ஷெல்டன் கூறுகையில், "இந்த தேர்வு மாணவர்களின் வெற்றிக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. அவர்களின் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மற்றும் அவர்களின் இளம் வாழ்க்கையில் அவர்கள் சேகரித்த அனைத்து அறிவுக்கும் ஒரு சல்யூட்.
அவர்களின் ஆர்வங்களைக் கண்டறியவும், பலனளிக்கும் மற்றும் செழுமைப்படுத்தும் அனுபவங்களில் ஈடுபடவும், குறிப்பிடத்தக்க விஷயங்களைச் சாதிக்கவும் உலகிலும் அந்த ஆற்றலைப் பயன்படுத்தும் அனைத்து வழிகளைப் பற்றி சிந்திப்பது உதவும்" என்றார்.