பிரான்ஸ் அரசு அண்மையில் கொண்டு வந்த ஓய்வூதிய சீர்திருத்தங்களை கைவிடக் கோரி அந்த நாடு முழுவதும் 7 லட்சத்து 57 ஆயிரம் பேர் வீதிகளில் இறங்கி போராட்டம் மேற்கொண்டுள்ளனர். பிரான்சின் மிகப்பெரிய தொழிற்சங்கமான சி.ஜி.டி. இதுகுறித்துக் கூறுகையில் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான பொது வாக்குப்பதிவு அதன் மூன்றாவது நாளில் இரண்டு மில்லியனைத் தாண்டியதாகக் கூறியுள்ளது.


புதிய சீர்த்திருத்ததின்படி  ஓய்வூதிய வயது வரம்பு 62லிருந்து 64 வயதாக ஆக உயரும். இதை எதிர்த்து ஜனவரி 31 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 1.2 மில்லியனாகவும் இரண்டாவது கட்டமாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 2.8 மில்லியனாகவும் கணக்கிடப்பட்டனர் என்று தொழிற்சங்கம் மேலும் கூறியுள்ளது.


போராட்டக்காரர்கள் மற்றும் காவலர்களுக்கு இடையே மோதலைத் தூண்டிய கூட்டத்தைக் கலைக்க அந்த நாட்டுக் காவல்துறை கண்ணீர்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியது. மாலை 6 மணிக்குள் உள்ளூர் நேரப்படி, கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்ததாகப் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.


அண்மையில் நடந்த போராட்டத்தில் பல பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டதால் அங்கே வேலைநிறுத்தம் ஏற்பட்டது. ஜனவரி 31 அன்று நிகழ்ந்த போராட்டத்துடன் ஒப்பிடுகையில் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களே பங்கேற்றதாகவும், பிற துறைகளிலும் இதே நிலை என்றும் கூறப்படுகிறது.


இதற்கிடையே இரண்டாவது முறை நிகழ்ந்த போராட்டம் காரணமாக இரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது, மேலும் பிரெஞ்சு நாட்டு இரயில்வே நிறுவனமான SNCF இன் ஊழியர்கள் அதிகம் உள்ள இரண்டு தொழிற்சங்களின் வேலை இன்று தொடங்கி நிகழும் எனக் கூறப்படுகிறது. இது ரயில் சேவையை இன்னும் கூடுதலாக பாதிக்கலாம். இதனால் அதிவேக TGV வகை ரயில்களில் மூன்றில் ஒரு பகுதியும், பிராந்திய மற்றும் இன்டர்சிட்டி ரயில்களில் பாதி எண்ணிக்கையிலான ரயில்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட உள்ளன.


 






பிரான்ஸின் பன்னாட்டு மின்சார நிறுவனமான EDFன் ஊழியர்களில்30 சதவிகிதத்துக்கும் அதிகமான ஊழியர்கள் நேற்று நன்பகல் தொடங்கி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், இதன் காரணமாக மின்சார உற்பத்தி தாமதமானதால் அதன் சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.






இதை உலக மீடியாக்கள் கவனிக்கும் வகையில் சோஷியல் மீடியாக்களில் #FranceOnStrike என்கிற ஹேஷ்டேக்கும் வைரலாகி வருகிறது.அதில் பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராடி வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.