இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போதுள்ள நிலையில், அந்த நாடு மீண்டு வர உலக வங்கியின் உதவி கட்டாயமாக தேவைப்படுகிறது. ஏற்கனவே அங்கு அரசியல் ஸ்திரதன்மை மோசமாக இருக்கும் நிலையில், நிதியை வைத்து மட்டுமே அனைத்தையும் சரி செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. 


பல்வேறு நாடுகள் தானாக முன்வந்து உதவினாலும், தற்போது இலங்கை இருக்கும் நிலையில், அது போதுமானதாக இல்லை. சர்வதேச அளவில் பெரிய அளவிலான உதவி இருந்தால் மட்டுமே இதிலிருந்து மீண்டு வர முடியும் என்பதால், இந்த விவகாரத்தை ஒரு நாட்டின் பிரச்சனையாக பார்க்காமல், சர்வதேச பிரச்னையாக பாவிக்க பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 




இந்நிலையில் ‛பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றில் இந்த அதிர்ச்சி தகவலை உலக வங்கிவெளியிட்டுள்ளது. இதோ அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: 


‛‛மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நாட்டில் போதுமான பெரிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கும் திட்டம் உலக வங்கியிடம் இல்லை என்று அறிக்கை ஒன்றில் கூறியுள்ள சர்வதேச நிதி நிறுவனம், அங்கு ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளது.




இலங்கை பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ஸ்திரத்தன்மையில் கவனம் செலுத்த வேண்டும், மேலும் இலங்கையின் எதிர்கால மீட்சி மற்றும் அபிவிருத்தி மீள்தன்மை மற்றும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  இந்த நெருக்கடியை உருவாக்கிய மூல கட்டமைப்பு காரணங்களை நிவர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.  தற்போது நிலவும் நெருக்கடிகள் குறித்து உலக வங்கி குழுமம் , மோசமான பொருளாதார நிலை மற்றும் இலங்கை மக்கள் மீது அதன் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது .






 "மருந்துகள் , சமையல் எரிவாயு , உரம் , பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு , மற்றும் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான பணப் பரிமாற்றம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையைப் போக்க உதவுவதற்காக , எங்களின் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் இந்த நிதியில் சுமார் 160 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழங்கப்பட்டுள்ளன, " என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.