இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீர்கேட்டை கண்டித்து அங்கு நடந்து வரும் போராட்டங்களை நாம் அனைவரும் அறிவோம். முதலில் எழுந்த போராட்டம், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவியை பறித்து, அவரை அரசியலில் இருந்து ஓட்டம் பிடிக்க வைத்தது.
அதன் பின், அரவது சகோதரரும், இலங்கையின் அதிபருமான கோத்தபய ராஜபக்சவின் அதிபர் பதவியை பறித்தது. இன்னும் கூட பற்றி எரிந்து கொண்டு தான் இருக்கிறது இலங்கை. அடிப்படை எரிபொருள் கூட இல்லாமல் துன்பத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் இலங்கை மக்கள். இதற்கிடையில், இலங்கையின் வரலாற்றில் இதுவரை நடைபெறாத சம்பவமாக, கடந்த ஜூலை 9 ம் தேதி அன்று அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச தங்கியிருந்த கொழும்புக் கோட்டையில் உள்ள அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
இது உலகம் முழுக்க, அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒரு நாட்டின் உயரிய பொறுப்பாக கருதப்படும் அதிபர் மாளிகையை, போராட்டக்காரர்கள் கைப்பற்றியதும், அங்கிருந்து அதிபர் தப்பியோடியதும், பின்னர் நாட்டை விட்டே அவர் வெளியேறியதும் நாம் அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில், அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள், அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தது, அங்குள்ள அறைகளை பயன்படுத்தியது, வளாகம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை போட்டோக்கள் மூலம் அறிய முடிந்தது.
அப்படி உள்ளே நுழைந்தவர்களில், சிலர் பல பொருட்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. அவ்வாறு திருடப்பட்ட பொருட்களை கண்டறிந்து, அதை திருடிச் சென்றவர்களையும் கைது செய்து வருகிறது இலங்கை போலீஸ். அதில் குறிப்பாக அதிபர் மாளிகையில் பயன்பாட்டில் இருந்த அயர்ன் பாக்ஸை திருடிச் சென்ற கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஆகஸ்ட் 5ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதோ போல அகரி மாளிகையில் தொலைக்காட்சிகளை திருடியதாக ஒரு நபர் கைது செய்யப்பட்டு, அவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிபர் மாளிகையில் நடந்த முற்றுகையில் நிறைய பொருட்கள் திருடப்பட்டதாகவும், அவை அடையாளம் காணப்பட்டு , மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்