போர்ச்சுகல் நாட்டில் இளம் பெண் ஒருவருக்கு திடீரென அக்குளுக்குள் கீழ் மூன்றாவதாக ஒரு மார்பகம் உருவானதும் அதிலிருந்து பால் சுரந்ததும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


போர்சுகலைச் சேர்ந்த 26 வயது இளம் பெண் அண்மையில் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்ஹை பிறந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவரது வலது கையில் அக்குளுக்குக் கீழே கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து அங்கிருந்து வெள்ளை நிறத்தில் ஏதோ திரவம் வடிந்தது. அதிர்ந்து போன அவர் உடனே சாண்டா மரியா மருத்துவமனைக்குச் சென்றார். போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இந்த மருத்துவமனை உள்ளது. அங்கே அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.


பரிசோதனையில் அந்தப் பெண்ணின் அக்குளுக்கு கீழே இருப்பது மூன்றாவது மார்பகம் என்பது உறுதியானது. இதனையடுத்து மருத்துவர்கள் அந்தப் பெண்ணின் அச்சத்தைப் போக்கும் வகையில் அரிதினும் அரிதான இந்த மூன்றாவது மார்பகம் குறித்து எடுத்துரைத்தனர். அவருக்கு பாலிமஸ்டியா காரணத்தால் மூன்றாவது மார்பகம் உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள்.




பாலிமாஸ்டியா என்றால் என்ன?


அனைத்து பாலூட்டிகளும் கூடுதல் முலைக்காம்புகளை கொண்டிருக்கலாம். இப்படி கூடுதலாக காணப்படும் மார்பகக் காம்புகள் சூப்பர் நியூமரி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அறிவியலில் பாலிமாஸ்டியா அல்லது பாலிதெலியா என்கின்றனர்.பாலிமஸ்டியா ஏற்படும்போது, கூடுதலாக வேறு இடங்களில் மார்பக திசுக்கள் வளர்கின்றன. சில நேரங்களில் இதில் முளைக் காம்புகள் உருவாகின்றன.   


அமெரிக்காவின் பிரபலமான மாயோ கிளினிக் கடந்த 1999 ஆம் ஆண்டு ஒரு மருத்துவ செய்திக் குறிப்பை பிரசுர்த்தது. அதில் உலகில் 6% பெண்களுக்கு கூடுதல் மார்பகத்துக்கான தசைநார் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. சிலருக்கு அது காம்புகள் உருவாகிறது என்றும் அந்த மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


பெரும்பாலான பெண்களுக்கு கருவுறும் காலத்தில் தான் பாலிமாஸ்டியா நிலை உருவாகிறது என்பது மருத்துவ நிபுணர்களின் கூற்றாக இருக்கிறது. மேம்மரி ரிட்ஜ் அல்லது மில்க் லைன் என்று சொல்லப்படும் மார்பக திசுக்கள் கூடுதலாக சுரப்பது கருவுற்றவுடன் நடைபெறுகிறது. இருந்தாலும், கரு வளர வளர அது தன்னாலேயே மறைந்துவிடுகிறது. ஆனால், அரிதினும் அரிதாக சிலருக்கு இது நடப்பதில்லை. அப்படிப்பட்டோருக்குத் தான் மூன்றாவது மார்பகம் உருவாகிறது. அதில் மிகவும் பொதுவானதாக அக்குளுக்குக் கீழ் மார்பகம் உருவாவது நடைபெறுகிறது.


இதனை போர்ச்சுகல் இளம் பெண்ணுக்கு விளக்கிக் கூறிய மருத்துவர்கள் இது கேன்சர் கட்டி போன்றது அல்ல என்று கூறினர். இருப்பினும், கேன்சருக்கான ஸ்க்ரீனிங் சோதனையையும் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர். பெண் உடல் எத்தனை விந்தையானது என்பதற்கு இந்தச் செய்தியும் ஒரு சாட்சியாக இருக்கிறது. பெண்கள் முப்பது வயதைக் கடந்து விட்டாலே அவ்வப்போது கால்சியம் பரிசோதனை, மார்பகப் புற்றுநோய்க்கான மேமோகிராம் ஸ்க்ரீனிங் ஆகியனவற்றை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.