ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் போலிஸாரால் கைது செய்யப்பட்டு, கோமா நிலைக்கு சென்ற இளம் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை அன்று இறந்துள்ளார். இதுகுறித்து உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


 






அவரது சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


22 வயதான மஹ்சா அமினி, தனது குடும்பத்தினருடன் ஈரானிய தலைநகருக்கு சென்ற போது, ​​இஸ்லாமிய பெண்களுக்கான கடுமையான ஆடைக் விதிகளை அமல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட போலிஸ் பிரிவினரால் செவ்வாயன்று தடுத்து வைக்கப்பட்டார். அங்கு, பொது இடங்களில் கட்டாயமாக முக்காடு அணிவது விதியாக உள்ளது.


இதற்கிடையில், துரதிர்ஷ்டவசமாக, அவர் இறந்துவிட்டதாகவும் அவருடைய உடல் மருத்துவ பரிசோதகர் அலுவலகத்திற்கு அனுப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக, அமினி ஆரோக்கியமாக இருந்ததாகவும் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு கோமா நிலைக்கு சென்றதாகவும் பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தப்போது இறந்துவிட்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


அவர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதிலிருந்து மருத்துவமனைக்குச் செல்வதற்கு இடையில் என்ன நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஈரானில் விதிமீறல்களை கண்காணிக்கும் 1500tavsir செய்தி தொலைக்காட்சி, அவர் தலையில் அடிபட்டிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.


சமூக ஊடகங்களில் வெளியான படங்களில், அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு வெளியே மக்கள் கூட்டம் கூடுவதையும், குவிந்திருந்தவர்களை கலைக்க போலீஸார் முயல்வதையும் காணலாம். அங்கு கூடியிருந்த மக்கள் கோபத்துடன் ஆட்சிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியுள்னர்.


"22 வயதான இளம் பெண் மஹ்சா அமினி, காவலில் வைக்கப்பட்ட பிறகு சந்தேகத்திற்கிடமான முறையில் மரணத்தது தொடர்பாக, அவருக்கு நேர்ந்த சித்திரவதை மற்றும் காவலில் உள்ள பிற மோசமான நடத்தை போன்ற குற்றச்சாட்டுகள் உள்பட, அனைத்தும் குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.


"தெஹ்ரானில் 'ஒழுக்கக் காவலர்' என்று அழைக்கப்படும் ஆடை கட்டுப்பாட்டை கண்காணிக்கும் காவல்துறை, அவர் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கைது செய்துள்ளனர். நாட்டின் தவறான, இழிவான மற்றும் பாரபட்சமான கட்டாய முக்காடு சட்டங்களை அவர்கள் செயல்படுத்தி வருகின்றனர். அவரை தன்னிச்சையாக கைது செய்தனர். இதற்கு பொறுப்பான அனைத்து அதிகாரிகளும் நீதிக்கு முன்பு நிறுத்தப்பட வேண்டும்" என ஆம்னெஸ்டி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.