ஆஸ்கர் விழாவில் தனது மனைவிக்கு நடந்த உருவக்கேலி சம்பவத்தால், தான் உணர்ச்சிவப்பட்டுவிட்டேன் என்று கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கோரினார் வில் ஸ்மித்.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.
விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார். அப்போது அவர் நடிகர் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி நகைச்சுவையாக பேசினார்.
இதனால் வருதமடைந்த வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார். பின்னர், நிகழ்ச்சியின் போதே அவர் தனது செயலுக்கு ஆஸ்கர் விழா குழுவினரிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், வில் நடிகர் கிறிஸ் ராக் பெயரை குறிப்பிட்டு மன்னிப்பு கேட்கவில்லை.
இந்த நிலையில், நேற்று நடந்த சம்பவத்தின்போது, தான் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டதாக நடிகர் வில் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்த செயலுக்கு வருந்துவதாகவும் கூறினார்.
இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஒரு விழா மேடையில் நகைச்சுவை என்பது இயல்பானது தான் என்றாலும், என்னுடைய மனைவியின் உடல்நல பாதிப்பு குறித்து தொகுப்பாளர் கிறிஸ் ராக் கேலி செய்தது என்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது. காதல் உங்களை பைத்தியக்காரத்தனமான செயல்களை செய்ய வைக்கும்.
அன்பு நிறைந்த இந்த பூமியில் வன்முறைக்கு இடமில்லை. இந்த செயலுக்கு மிகவும் வருந்துகிறேன்.
எனது செயலுக்காக கிறிஸ் ராக்கிடமும், நிகழ்ச்சி அமைப்பாளர்களிடமும், நிகழ்ச்சியை நேரிலும் தொலைக்காட்சி வழியாக பார்த்த பார்வையாளர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், வில் ஸ்மித் ஆஸ்கர் விழா மேடையில் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டு உருக்கமுடன் பேசியபோது, காதல் பைத்தியக்காரத்தனமாக செயல்களை செய்ய வைக்கும் என்றார். தன் மனைவி உடல்நிலை பாதிப்பு குறித்து உருவக்கேலி செய்த நடிகர் கிற்ஸ் ராக்கை அறைததற்காகவும் விழா மேடையிலே ஆஸ்கர் குழுவினரிடம் மன்னிப்பு கேட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.