சர்வதேச தூக்க தினமானது ஆண்டுதோறும் மார்ச் 17 ஆம் தேதி கடைபிடிக்கிறது. தூக்கத்தைப் போற்றிப்பாடும் கவிதைகள் தமிழ் சினிமாவில் ஏராளம் உண்டு. தூக்கம் கண்களைத் தழுவட்டுமே, காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே, மெத்தைய வாங்கின தூக்கத்தை வாங்கல என்று பல மனதை வருடும் தத்துவத்தை உதிர்க்கும் பாடல்கள் உண்டு.


ஒரு மனிதனுக்கு குறைந்தது 6 மணி நேரமாவது நிம்மதியான தூக்கம் வேண்டும் என்று வலியுறுத்துகிறது மருத்துவ உலகம். இந்நிலையில் தான் ஆண்டுதோறும் சர்வதேச தூக்க தினம் கடைப்பிடிக்கபடுகிறது. வேர்ல்டு ஸ்லீப் சொசைட்டி ( World Sleep Society ) எனப்படும் அமைப்பு 2008 ஆம் ஆண்டு முதல் இந்த தினத்தை பிரபலப்படுத்திக் கொண்டாடி வருகிறது.


சர்வதேச தூக்க தினம்: வரலாறு


தூக்க சிகிச்சை நிபுணர்கள் ஒன்றிணைந்தே இந்த சர்வதேச தூக்க தினம் கொண்டாடப்படுவதை முறைமைப்படுத்தினர். இதற்கு முக்கியக் காரணம் உலகம் முழுவதும் சமீப காலமாக அதிகரித்து வரும் தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகளே. தூக்கத்தின் அவசியத்தை உணர்த்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.


இந்த ஆண்டு கருப்பொருள் என்ன?


ஆண்டுதோறும் தூக்கம் தினத்திற்கு ஒரு பிரத்யேக கருப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘Sleep is Essential for Health’ ஆரோக்கியத்திற்கு அவசியம் தூக்கம் என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போதிய அளவு தூக்கமானது உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் என்பதை உணர்த்தவே இந்தக் கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


சர்வதேச தூக்க தினம் 2023: முக்கியத்துவம் என்ன?
 
ஒரு தனிநபரின் உடல் ஆரோக்கியத்திற்கு இரவில் நிம்மதியான தூக்கம் மிகமிக அவசியம். ஆரோக்கியமான தூக்க பழக்கவழக்கங்கள் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான உடல்நிலை இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
சர்வதேச தூக்க தினம் கோட்ஸ்:


"அமைதி ஆன்மாவுக்கு தேவை. தூக்கம் உடலுக்கு ஊக்கமும் உற்சாகமும் தரத் தேவை" வில்லியம் பென்
“உறக்கத்தில் மூழ்கியிருக்கும் ஆன்மா கூட கடினமாக உழைத்து, உலகத்தை உருவாக்க உதவுகிறது." - ஹெர்காலிட்டஸ்
“தூக்கம் தான் சிறந்த தியானம்" - தலாய் லாமா
“உங்கள் எதிர்காலம் உங்கள் கனவுகளில் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால் தூங்கச் செல்லுங்கள்" - மேசட் பெராசனி
“தூக்கம் வராத போது நடக்கும் ஒன்றுதான் வாழ்க்கை." – ஃப்ரான் லெபோவிட்ஸ்


தூக்கம் வர இதை ட்ரை பண்ணுங்க..


சிலருக்கு 9 மணிக்கெல்லாம் தூக்கம் கண்களை தழுவட்டுமே என்று காதில் கீதம் பாடும். 10 மணியெல்லாம் அவர்களுக்கு நடுச்சாமம் போல் ஆழ்ந்த உறக்க நேரமாகிவிடும். ஆனால் சிலருக்கு மணி 12 ஆனால் மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல என்ற பாடல் மட்டுமே கேட்கும். 100-இல் இருந்து தலைகீழாக ஒன்று வரை நூறு முறை எண்ணினாலும் கூட தூக்கமின்றி தவிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தூக்கம் வர தங்களின் வாழ்க்கைமுறையில் சில பல விஷயங்களை சரி செய்தாலே போதும். அதில் மிக முக்கியமானது உணவு முறை. உணவில் இந்த 5 வகை பொருட்களை பயன்படுத்தி வந்தால் நிச்சயமாக நல்ல தூக்கத்திற்கு கேரன்டி எனக் கூறுகிறார்கள் நிபுணர்கள்.


பால்:


பாலில் ட்ரிப்டோஃபேன் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவை தூக்கத்திற்கு நல்ல அடித்தளம் போடும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தூக்கத்தை உறுதி செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.



உலர் கொட்டைகள்:


நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் ஆகியவை உலர் கொட்டைகளில் அதிகமாக உள்ளன. இதில் உள்ள மெலட்டோனின் மற்றும் ஜிங்க், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ், ட்ரிப்டோபேன் ஆகியன தூக்கத்தை சீராக அமைத்துத் தரும். பாதாம் பருப்பில் ஜிங்க் மற்றும் மெலடோனின் இருக்கின்றன. மேலும் இதில் மெக்னீஸியமும் இருக்கிறது. அதேபோல் பூசணி விதைகளும் நல்ல தூக்கத்திற்கு உதவும். பூசணி விதையிலும் ஜிங்க் மற்றும் மெக்னீஸிம் இருக்கின்றது.


ஹெர்பல் டீ:


காலங்காலமாக மூலிகை தேநீர் மருத்துவ குணங்கள் பற்றி பேசப்படுகிறது. அதன் மனம் மற்றும் தெரபி அம்சம் அதற்குக் காரணம். Chamomile tea ( சீமை சாமந்தி டீ ) , இது ஒரு அற்புதமான மூலிகை tea ஆகும். இந்த tea -யை குடித்தால் நீண்ட நாட்கள் இளமையோடு இருக்கலாம்.மேலும் இதில் ஏராளமான நன்மைகள் உள்ளது. மன அழுத்தம் , எதிர்ப்பு சக்தி , மாதவிடாய் வலி , தூக்கமின், கருவளையங்கள் போக்க , பொடுகு , சளி போன்ற அணைத்து பிரச்னைகளுக்கும் இந்த Chamomile tea -யை பருகலாம் . தூக்கம் நன்றாக அமைய உதவும். அதேபோல் லேவண்டரும் தனது நறுமணத்தால் தூக்கத்தை உறுதி செய்யும்.


டார்க் சாக்கலேட்:


டார்க் சாக்லேட்டுகள் நிறைய சாப்பிடக் கூடாது. ஆனால் அதில் உள்ள செரடோனின் உங்களை ரிலாக்ஸ்டாக இருக்க உதவும். அதனாலேயே இரவு உணவில் டெஸர்ட்டாக டார்க் சாக்கலேட் உண்போர் உண்டு.


வாழைப்பழம்:


வாழைப்பழத்தில் உள்ள மெக்னீஸியமும் பொட்டாசியமும் தசைகளையும், நரம்புகளை லகுவாக்கி நல்ல தூக்கத்திற்கான சூழலை உருவாக்கும். கூடவே அதில் பி6 இருக்கிறது. அது ட்ரிப்டோபேனை செரட்டோனினாக மாற்றி நல்ல ஆசுவாசத்தைத் தரும்.