பிரிட்டன் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் பதவியை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளார். இது அந்நாட்டு அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.


போரிஸ் ஜான்சனுக்கு எதிராக எழுந்த புகார்கள்:


கடந்த 2020 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் பிரிட்டனில்  கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்த காலத்தில் பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடு அமைந்துள்ள டவுனிங் தெருவில் போரிஸ் ஜான்சன் பார்ட்டி நடத்தியதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புகார் எழுந்தது. 


முதலில் இதை போரிஸ் ஜான்சன் தரப்பு மறுத்த நிலையில், பின் அதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் அவருக்கு லண்டன் போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, சொந்த கட்சியை சேர்ந்த எம்.பி.க்களே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். பரபரப்பான அரசியல் கட்டத்திற்கு மத்தியில், கடந்தாண்டு ஜூலை 7ஆம் தேதி, பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார்.


பிரதமர் பதவியில் இருந்து விலகிய போரிஸ் ஜான்சன், தற்போது பிரதமராக உள்ள ரிஷி சுனக்கின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகார்கள் குறித்து விசாரித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை கங்காரு நீதிமன்றம் என சாடியுள்ளார்.


கடந்த ஆண்டு தனது அரசியல் வீழ்ச்சியில் ரிஷி சுனக் பெரும் பங்காற்றியதாக குற்றம்சாட்டியுள்ள போரிஸ், "நாடாளுமன்ற சிறப்பு அதிகாரங்கள் குழு அரசியல் அடியாள் வேலை செய்து வருகிறது. அதன் தலைவரான லேபரின் ஹாரியட் ஹர்மன் ஒரு சார்புடன் செயல்பட்டு வருகிறார்" என தெரிவித்துள்ளார்.


போரிஸ், ரிஷி சுனக் இடையே முற்றும் மோதல்: 


போரிஸின் குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்ற குழு எந்த விதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை. கொரோனா விதிகளை அதிகாரிகள் மீறியது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் போரிஸ் ஜான்சன் பொய் சொன்னாரா என நாடாளுமன்ற குழு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் குழு சமர்பித்த அறிக்கை குறித்து போரிஸ் ஜான்சனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால், இன்னும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து போரிஸ் ஜான்சன் வெளியிட்ட அறிக்கையில், "கமிட்டியின் அறிக்கை துல்லியமற்றது. பாரபட்சம் நிறைந்ததாக உள்ளது. இப்போது ஒருசில மக்களால் நான் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து போரிஸ் விலகியிருப்பதால், அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், சிறிய வாக்கு வித்தியாசத்தில்தான் போரிஸ் அந்த தொகுதியில் வெற்றிபெற்றார். தற்போது, அந்த தொகுதிக்கு தேர்தல் நடுத்தப்படும் பட்சத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி உள்ளது. 


போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசில் நிதி அமைச்சராக பதவி வகித்தவர்தான் ரிஷி சுனக். போரிஸ் ஜான்சனுக்கு எதிராக ரிஷி  போர்கொடி தூக்கியதால்தான் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் விலக நேர்ந்தது. தற்போது, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து போரிஸ் ராஜினாமா செய்திருப்பதால், இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.