Somalia Attack : சோமாலியா தலைநகர் மொகதிசுவில் கடற்கரை ஹோட்டல் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


15 ஆண்டுகளாக...


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தி வருகின்றனர். சுமார் 15 ஆண்டுகளாக பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது.


மேலும், உகாண்டா நாட்டைச் சேர்ந்த அமைதி படையும் சோமாலியாவில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலும், ஹோட்டல்கள் மற்றும் சோதனைச் சாவடிகளைச் குறிவைத்து தீவிரவாதிகள் சமீப காலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். 


6  மணி நேரமாக தொடர்ந்து தாக்குதல்


இந்நிலையில்,  சோமாலியா தலைநகரான மொகடிஷுவில் இருந்து தென்மேற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள  லிடா கடற்ரையில்  உள்ள பிரபல ஹோட்டலை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சுமார் 7 பேர் கொண்ட குழு நேற்று இரவு 8 மணிக்கு ஹோட்டலுக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து, பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து எதிர் தாக்குதல் நடத்தினர்.


சுமார் 6 மணி நேரமாக பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். ஆனாலும் இந்த கடுமையான தாக்குதலில் சிலர் உயிரிழந்ததாகவும், படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையில், பயங்கரவாதிகள் மக்களை குறிவைத்து தாக்கல் நடத்தினர். 


9 பேர் உயிரிழப்பு


இந்த தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 10 பேர் படுகாயமைந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.  இதனை  காவல்துறை உறுதி செய்தது. மேலும், ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பதுங்கி இருந்து சுமார் 84 பேரை பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். 


உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்கள் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் ஏழு பேரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான ஆல்-ஷபாப் பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 


முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சோமாலியாவில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் சுமார் 613 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தக்குதலானது 2017ஆம் ஆண்டுக்கு பிறகு 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.