வடகொரிய அரசு கொரோனா தொற்றில் இருந்து மீண்டு முன்னேறி வருவதாகக் கூறியிருந்தாலும், கொரோனா தொற்று காரணமாக வட கொரியாவில் மோசமான சூழல் நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் கொரோனா பாதிப்புகள் குறித்த தரவுகள் இல்லாததால் இந்த சூழல் நிலவுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 


கடந்த மே 12, வட கொரியா நாட்டின் முதல் கொரோனா பாதிப்பு பதிவானதாக அறிவிக்கப்பட்டது. எனினும் கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதை உலக சுகாதார நிறுவனத்தின் எமர்ஜென்சி பிரிவுகளின் இயக்குநர் மைக்கேல் ரையன் கேள்வி எழுப்பியுள்ளார். 


வட கொரிய அரசு குறைந்த அளவிலான தரவுகளை மட்டுமே அளித்துள்ளதாகக் கூறிய மைக்கேல் ரையன், `வடகொரியாவில் நிலை மோசமாக இருப்பதாகக் கணிக்கிறோம்’ என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தொடர்ந்து அவர், `வட கொரியாவில் நேரடியாக என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கணித்துக் கூறும் நிலையில் நாம் இல்லை. தேவையான தரவுகள் கிடைக்காததால், உலகத்திற்கு உண்மையான செய்தியைக் கூறுவது மிக மிக கடினமாக இருக்கிறது’ எனக் கூறியுள்ளார். 



உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொற்றுக்கான சிறப்புக் குழுவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியதில், வட கொரியாவில் சுமார் 30 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதிகாரப்பூர்வ தரவுகள் அவற்றை வெறும் `காய்ச்சல்’ எனக் குறிப்பிட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 


வட கொரிய அரசு செய்தி நிறுவனமான கொரியன் செண்ட்ரல் நியூஸ் ஏஜென்சி வெளியிட்டிருந்த தகவல்களின்படி, கடந்த ஏப்ரல் முதல் சுமார் 38 லட்சம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 69 மரணங்களுக்குப் பிறகு, புதிதாக மரணங்கள் நிகழவில்லை எனவும் கூறியுள்ளது. 


உலகிலேயே மிக மோசமான சுகாதாரக் கட்டமைப்புகளைக் கொண்ட நாடுகளுள் ஒன்றான வட கொரியாவில் சுமார் 95 சதவிகித கொரோனா பாதிப்புகள் மீண்டுள்ளதாகக் கூறப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 



இதுகுறித்து பேசிய மரியா வான் கெர்கோவ், `நோயில் இருந்து மீண்டவர்கள் குறித்து செய்திகள் வெளிவந்தாலும், வட கொரியாவில் இருந்து வரும் தகவல்கள் சொற்பமாகவே இருக்கிறது’ எனக் கூறியுள்ளார். 


உலக சுகாதார நிறுவனம் வழங்கிய தடுப்பூசிகளையும் வட கொரியா நிராகரித்துள்ளதோடு, அங்கு சுமார் 2.5 கோடி பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை. 


இதனைச் சுட்டிக்காட்டிய மரியா வான் கெர்கோவ், `பல முறை நாங்கள் உதவி வழங்க கோரியுள்ளோம்.. மூன்று முறை தடுப்பூசிகளை வழங்குவதற்காக கேட்டோம்.. தற்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றி இதனை சரி செய்ய விரும்புகிறோம். ஏற்கனவே மோசமான சுகாதாரக் கட்டமைப்பு கொண்ட நாட்டில் பெரு மக்கள் தொகையில் கொரோனா பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. இது வட கொரிய மக்களுக்கு நல்லது அல்ல. அப்பகுதிக்கும் நல்லது அல்ல. நம் உலகத்திற்கும் நல்லது அல்ல’ எனக் கூறியுள்ளார்.