உலகிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்டவரான எலான் மஸ்க் சமீபத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வொர்க் ஃப்ரம் ஹோம் கலாச்சாரத்தை எதிர்த்துள்ளார். 


டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அலுவலகத்திற்கு மீண்டும் திரும்புமாறு உத்தரவிட்ட விவகாரம் ட்விட்டர் தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 


சமீபத்தில் டெஸ்லா ஊழியர்களுக்கு ஈ மெயில் மூலமாக எலான் மஸ்க் வெளியிட்ட உத்தரவில், `வீட்டில் இருந்தே பணியாற்ற விரும்புபவர்கள் டெஸ்லா அலுவலகத்தில் வாரம் ஒன்றிற்குக் குறைந்தபட்சமாக 40 மணி நேரங்கள் பணியாற்ற வேண்டும்; இல்லையேல் டெஸ்லா நிறுவனத்தை விட்டு வெளியேறுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார். 



மேலும் அவர், `ஊழியர்கள் டெஸ்லா நிறுவனத்தின் முதன்மை அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும். உங்கள் பணிக்குப் பொருந்தாத கிளை அலுவலகங்களிலும் பணியாற்ற அனுமதி இல்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார். 


இந்த ஈ மெயில் வெளியில் கசிந்தவுடன், அதன் உண்மைத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்திருந்த நிலையில், இதுதொடர்பான பதிவு ஒன்றில், அலுவலகத்திற்குச் சென்று பணியாற்றுவது பழைய கான்செப்ட் என கூறப்பட்டிருந்த பதிவு ஒன்றில் எலான் மஸ்க், `அவர்கள் வேறு எங்கேயாவது சென்று வேலை செய்வது போல நடிக்கட்டும்’ எனக் கூறியுள்ளார். 






தன் தொழிலாளர்களை எலான் மஸ்க் மோசமாக நடத்தியது இது முதல் முறையல்ல. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து பேசி வந்த போது, மற்றொரு தொழிலதிபரான கீத் ராபோயிஸ், எலான் மஸ்கின் தொடக்க காலம் குறித்து பதிவிட்டிருந்தார். அதில், ஸ்பேஸ் எக்ஸ்ப்லோரேஷன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை எலான் மஸ்க் நடத்திய வந்த போது, இண்டெர்ன் பணியாளர்கள் காபி குடிப்பதற்காக நின்று கொண்டிருந்ததைக் கண்டதாகவும், அது உற்பத்தியைப் பாதிப்பதாகக் கூறி, இண்டெர்ன்களைப் பணியை விட்டு நீக்குவதாக மிரட்டி, சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியதாகவும் கூறியிருந்தார். 



சீனாவின் ஷாங்காய் பகுதியில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையில், சுமார் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வாரம் 6 நாள்களும், ஒவ்வொரு நாளும் 12 மணி நேர வேலை செய்யவும் தொழிலாளர்கள் பணிக்கப்படுகின்றனர். மேலும், கொரோனா தொற்றைத் தவிர்க்க தொழிலாளர்கள் கார் தொழிற்சாலையின் தரையில் தூங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் பெரிதும் சர்ச்சைக்குள்ளானது.


தொடர்ந்து தொழிலாளர்களை நடத்தும் விதம் குறித்து, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மீது சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், தற்போதைய அவரது அறிவிப்பு அதனை மேலும் உறுதி செய்துள்ளது.