Dengue Vaccine: டெங்கு காய்ச்சலுக்கான இரண்டாவது தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு முன்ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பானை சேர்ந்த மருந்து நிறுவனமான டகேடா இந்த தடுப்பூசியை தயாரித்துள்ளது. TAK-003 என அந்த தடுப்பூசி அழைக்கப்படுகிறது.


டெங்குவுக்கு இரண்டாவது தடுப்பூசி:


டெங்குவை ஏற்படுத்தும் வைரஸின் நான்கு வகை பலவீனமான நுண்ணுயிரிகளை கொண்டு TAK-003 தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் நான்கு வகைப்படும். இது, live-attenuated வகை தடுப்பூசியாகும். அதாவது, எந்த வைரஸ் தாக்குகிறதோ, அந்த வைரஸின் பலவீனமான நுண்ணுயிரிகளை நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுத்துவது.


அந்த வகையில், டெங்குவை ஏற்படுத்தும் நான்கு வகை நுண்ணுயிரிகளை பலவீனமாக்கி, உடலில் எந்த வித சேதமும் ஏற்படுத்தாதவாறு அதையே நோய் எதிர்ப்பு சக்தியாக TAK-003 தடுப்பூசியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 


உலக சுகாதார அமைப்பு வழங்கிய முன்ஒப்புதல்:


முன்ஒப்புதல் என்றால் தடுப்பூசியின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவை ஆய்வு செய்யப்படும். சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப தடுப்பூசி தயாரிக்கப்பட்டதா? சர்வதேச அளவில் குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இதை பயன்படுத்தலாமா என்பது உறுதி செய்யப்படும்.


முன்ஒப்புதல் அளிக்கப்பட்டதால் ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் மற்றும் பிற உலகளாவிய சுகாதார அமைப்புகளின் கொள்முதல்களில் இந்த தடுப்பூசி சேர்க்கப்படும். பரவலாக விநியோகம் செய்யவும் பொது சுகாதாரத் திட்டங்களிலும் இது பயன்படுத்தப்படும்.


உலக சுகாதார அமைப்பின் ஒழுங்குமுறை மற்றும் முன்ஒப்புதல் பிரிவு இயக்குநரும் மருத்துவருமான ரோஜெரியோ காஸ்பர், இதுகுறித்து கூறுகையில், "இரண்டு டெங்கு தடுப்பூசிகளுக்கு மட்டுமே இன்றுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


தடுப்பூசிகள் தேவைப்படும் அனைத்து சமூகங்களுக்கும் தடுப்பூசிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், மேலும் பல தடுப்பூசி உருவாக்குநர்கள் மதிப்பீட்டிற்கு முன்வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.


டெங்கு எதனால் ஏற்படுகிறது?


TAK-003 தடுப்பூசியானது 6 முதல் 16 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கலாம். இந்த தடுப்பூசி 2 டோஸ்களாக செலுத்தப்படும். 3 மாத இடைவெளியில் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட வேண்டும். சனோஃபி பாஸ்டர் தயாரித்த CYD-TDV தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு முன்னதாக முன்ஒப்புதல் வழங்கியது.


இங்கிலாந்து, பிரேசில், அர்ஜென்டினா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளும் TAK-OO3 தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளன. டெங்கு என்பது ஏடிஸ் கொசுக்களால் பரவும் ஒரு நோய். மழைக்காலங்களில் கொசுக்கள் அதிகமாக இருக்கும் நேரத்தில் இந்த நோய் தீவிரமடைகிறது.


குறிப்பாக தேங்கி இருக்கும் நல்ல நீரில் தான் இந்த கொசுக்கள் உருவாகிறது. டெங்கு எதிரான போராட்டம் உலக நாடுகள் மத்தியில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளது. இருப்பினும் ஆண்டுதோறும் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது.


அதன்படி தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் கடந்த 4 மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. பிரேசிலிய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டு கர்ப்பிணிப் பெண்களிடையே டெங்கு பாதிப்பு அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் 6 வாரங்களில் சுமார் 1,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பாதிப்பு 1,157 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.