தெற்காசிய வரலாற்றில், அரசியல் பின்னணி அல்லாத முதல் பெண் பிரதமராக இலங்கையைச் சேர்ந்த ஹரிணி அமரசூரிய பதவி ஏற்றுள்ளார். யார் இவர்? பார்க்கலாம்.
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணியைச் சேர்ந்த அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்று அதிபர் ஆனார். தொடர்ந்து இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய இன்று பொறுப்பேற்றார். இவர் கல்வித்துறை அமைச்சர் பொறுப்பையும் வகிக்கிறார்.
54 வயதான ஹரிணி, இலங்கையின் 3வது பெண் பிரதமராவார். முன்னதாக, இலங்கை முன்னாள் பிரதமர் சாலமன் பண்டாரநாயக்க கொல்லப்பட்ட பின், அவரின் மனைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமர் ஆனார். தொடர்ந்து அவரின் மகள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா இலங்கையின் பிரதமராகப் பதவி வகித்து இருந்தார்.
பிற பெண் பிரதமர்கள் யார்?
அதேபோல இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் தந்தை நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர். பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவும் அரசியல் பின்புலம் கொண்டவரே. மேலும் வங்க தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை நாடறிந்த அரசியல்வாதி ஆவார்.
எனினும் இதற்கு முன்பு அரசியல் பின்புலம் இல்லாமல் எந்தப் பெண்களும் தெற்காசியாவில் பிரதமர் பதவியை வகித்ததில்லை. இதனால் தெற்காசியாவின் அரசியல் பின்னணி இல்லாத முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை ஹரிணி அமரசூரிய பெற்றுள்ளார்.
யார் இவர்?
ஹரிணி அமரசூரிய 1970ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி கொழும்புவில் பிறந்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் இளங்கலை படித்தவர், வெளிநாட்டில் உயர் கல்வி முடித்தார். ஆஸ்திரேலியாவின் மெக்குவரி பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு மானுடவியல் மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். எடின்பர்க் பல்கலை.யில் முனைவர் பட்டம் பெற்றார்.
இலங்கை திரும்பியவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறையில் மூத்த விரிவுரையாளராக பணியாற்றினார்.
கல்வி சார் பணிகளில்..
யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவில் உறுப்பினராகத் திறம்படச் செயலாற்றி உள்ளார். வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, குழந்தைகள் பாதுகாப்பு, இலங்கையின் கல்வி முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் பற்றி ஆய்வுகளை செய்து, அது தொடர்பாகவும் குரல் கொடுத்து வந்தார். ஆசிரியர் சங்கங்கள் பலவற்றில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். கல்வி சார்ந்து பல்வேறு போராட்டங்களை ஹரிணி அமரசூரிய முன்னெடுத்துள்ளார்.
2020ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கி, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் ஆய்வுகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற குழுவில் இடம் பெற்றிருந்தார்.
21,500 கி.மீ. பயணித்த ஹரிணி
இந்த நிலையில் 2024 அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்காக ஹரிணி அமரசூரிய, சுமார் 21,500 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பரப்புரையில் ஈடுபட்டார். அனுர குமார திசநாயக்கவுக்காக பெண்கள் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த நிலையில் ஹரிணி அமரசூரியவுக்கு தற்போது இலங்கையின் பிரதமர் பதவியும் கல்வித்துறை அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.