ஓமிக்ரான் வைரஸின் புதிய திரிபு பரவலால் உலக நாடுகள் நீண்ட தூர விமான பயணத்தின்போது பயணிகள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.


கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவியது. கொரோனா பரவியதையடுத்து உலகம் முழுவதும் திகைத்து முடங்கியது. உலகமே ஊரடங்கு, தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி என கொரோனாவுடன் போராடத் தொடங்கியது. ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஓமிக்ரான் என கொரோனா நிறைய திரிபுகளாக உருமாறியுள்ளது. இவற்றில் டெல்டா திரிபு தான் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனாவில் நிறைய உயிர்கள் பலியாகவும் டெல்டா திரிபு தான் காரணமாக இருந்தது. இந்நிலையில் சீனாவில் இந்த நவம்பர் இறுதி தொடங்கி மீண்டும் ஓமிக்ரானின் புதிய திரிபு ஒன்று பரவிவருகிறது.


ஐரோப்பாவில்  XBB.1.5 திரிபு பரவி வருகிறது. அமெரிக்காவில் இந்த வகை திரிபு தான் இப்போது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த திரிபு உலகம் முழுவதும் இன்னொரு அலையை ஏற்படுத்துமா என்று இப்போதே கணிக்க முடியாது என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், ஓமிக்ரான் வைரஸின் புதிய திரிபு பரவலால் உலக நாடுகள் நீண்ட தூர விமான பயணத்தின்போது பயணிகள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.


சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கிருக்கும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது குறித்து சீனா அரசாங்கம் எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை வெளியிடாததால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வந்தது. 


இந்நிலையில் சமீபத்தில், ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கட்டாய கொரோனா கட்டுப்பாடுகளை விதித்திருப்பது, சரியே என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து நேற்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஜெனீவாவில் காணொலிக் காட்சி வழியாக பேட்டி அளிக்கையில், “ சீனாவில் கொரோனா பாதிப்பானது மிக அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது. ஆனால், அது குறித்து முழுமையான மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை சீன அரசால் வெளியிடப்படவில்லை.


இந்நிலையில், உலக நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகளை விதிப்பதால், அது தன் நாட்டு மக்களை காக்கும் என நம்பி கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்துகின்றன, இது சரியானது மட்டுமல்ல நியாயமானதும் தான்" என அவர் கூறியுள்ளார்.