உலக சுகாதார அமைப்பு  அதன் தலைமை விஞ்ஞானியாக சௌமியா சுவாமிநாதனுக்கு பதிலாக டாக்டர் ஜெர்மி ஃபாரார் நியமிக்கப்படுவார் என்று அறிவித்துள்ளது. தற்போது வெல்கம் அறக்கட்டளையின் இயக்குநராக இருக்கும் டாக்டர் ஃபரார், 2023ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சுகாதார அமைப்பில் இணைவார்.


உலக சுகாதார அமைப்பின் முதல் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், கடந்த மாதம் ஐ.நா.வின் சுகாதார நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.




சௌம்யா சுவாமிநாதன் யார்?
டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் இந்தியாவைச் சேர்ந்த ஒரு குழந்தைநல மருத்துவர் ஆவார், அவர் காசநோய் மற்றும் எச்.ஐ.வி பற்றிய தனது ஆராய்ச்சிக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டவர். மருத்துவ பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சியில் மட்டுமல்லாமல் தலைமைத்துவத்திலும் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், சுகாதாரக் கொள்கை தொடர்பான விவாதங்களிலும் முக்கியப் பங்கினை வகித்தவர்.


COVID-19, மங்கி பாக்ஸ் மற்றும் எபோலா உள்ளிட்ட உலகளாவிய நோய் பரவல்கள் குறித்த உலக சுகாதார மைய ஊடக சந்திப்புகளில் அவர் நன்கு அறிந்த முகமாக இருந்தார்.


டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் 350 க்கும் மேற்பட் மதிப்பாய்வு செய்யப்பட்ட வெளியீடுகள் மற்றும் புத்தக அத்தியாயங்களை எழுதியது எனப் பல புகழுக்குச் சொந்தக்காரர். உலக சுகாதார மையத் தகவலின்படி, அவர் அமெரிக்க தேசிய மருத்துவ அகாடமி மற்றும் இந்தியாவில் உள்ள மூன்று அறிவியல் அகாடமிகளின் வெளிநாட்டு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


தற்போது தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் டாக்டர் ஃபரார், ஒரு மருத்துவ விஞ்ஞானி, வியட்நாமில் உள்ள வெப்பமண்டல நோய்களுக்கான மருத்துவமனையில் மருத்துவ ஆராய்ச்சி பிரிவின் இயக்குநராக 17 ஆண்டுகள் பணியாற்றினார், அங்கு அவரது ஆராய்ச்சி வளர்ந்து வரும் தொற்று நோய்களை மையமாகக் கொண்டதாக இருந்தது. அவர் 2013ல் வெல்கம் நிறுவனத்தில் சேர்ந்தார்.


உலக சுகாதார மையத்தின் முதன்மை விஞ்ஞானியாக, டாக்டர் ஃபரார் அறிவியல் பிரிவை மேற்பார்வையிடுவார். உலகெங்கிலும் உள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிறந்த விஞ்ஞானிகளை ஒன்றிணைத்து, அவர்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் அவர்களின் அறிவினை ஒன்றிணைத்து தற்போதைய அத்தியாவசியத் தேவையான மக்களுக்கான உயர்தர சுகாதார சேவைகளை உருவாக்கி வழங்குவார்.


டாக்டர் ஃபரார் யுகே மருத்துவ அறிவியல் அகாடமி, ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் அமைப்பு (EMBO), அமெரிக்க தேசிய அகாடமி மற்றும் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகவும் உள்ளார். 


இதற்கிடையில், டாக்டர் அமெலியா லட்டு அஃபுஹாமங்கோ துய்புலோடு அதன் தலைமை செவிலியர் அதிகாரியாக வருவார் என்றும் WHO தெரிவித்துள்ளது. முன்னதாக டோங்கா இராச்சியத்தின் சுகாதார அமைச்சராக இருந்த துய்புலோடு மற்றும் அதற்கு முன் டோங்காவின் தலைமை நர்சிங் அதிகாரி, 2023 முதல் காலாண்டில் WHO இல் இணைவார்.