Pope Francis Funeral: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஃப்ரான்சிஸின் இறுதிச்சடங்கில், பல்வேறு உலக தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
போப் ஃப்ரான்சிஸ் இறுதிச்சடங்கு:
உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் 266வது தலைவரான போப் ஃப்ரான்சிஸ் (88) மறைவை தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 26) அவரது உடல் ரோமில் நல்லடடக்கம் செய்யப்பட உள்ளது. அர்ஜென்டினாவைச் சேர்ந்த போப், இரட்டை நிமோனியாவுடன் போராடி ஐந்து வாரங்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், திங்கட்கிழமை (ஏப்ரல் 21) அன்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு காலமானார். அதனை தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு, லட்சக்கணக்கான மக்கள் நேரில் அஞ்சலில் செலுத்தினர். அதனைதொடர்ந்து, இன்று போப் ஃப்ரான்சிஸ் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.
இறுதிச் சடங்கு எங்கே, எப்போது நடைபெறும்?
போப் ஃப்ரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு வாட்டிகனில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு முன்னாள் உள்ள சதுக்கத்தில் நடைபெறும். உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிச் சடங்கிற்கு முன் அவரது உடல் ஒரு சைப்ரஸ் மரக்கட்டையால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்படும். பின்னர் அது ஒன்றுக்குள் ஒன்று பொருந்தக்கூடிய வகையிலான இரண்டு சவப்பெட்டிகளில் வைக்கப்படும், ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான மரங்களால் ஆனவை. இந்த சடங்கிற்கு கார்டினல்கள் கல்லூரியின் டீன் கார்டினல் ஜியோவானி பாட்டிஸ்டா ரே தலைமை தாங்குவார்.
இறுதி மரியாதை - 4 கிமீ ஊர்வலம்:
நிகழ்வின்போது பிஷப்புகளும் கார்டினல்களும் ஊதா நிற மேலாடையுடன் வெள்ளை டமாஸ்க் மிட்டர்கள் அணிந்திருப்பார்கள். அதே நேரத்தில் ஆயர்கள் வெற்று வெள்ளை மிட்டர்களை அணிவார்கள். இன்று நடைபெறும் திருப்பலியில் அப்போஸ்தலர் நடபடிகள், பரிசேயர்களுக்கு புனித பவுல் எழுதிய நிருபம் மற்றும் யோவானின் நற்செய்தி ஆகியவற்றிலிருந்து வாசிப்புகள் அடங்கும். கார்டினல்கள் கல்லூரியின் டீனால் தயாரிக்கப்பட்ட மறையுரையைத் தொடர்ந்து, நற்கருணை வழிபாட்டு முறை, புனித ஒற்றுமை மற்றும் இறுதி பாராட்டு சடங்குக்கு முன் பிரெஞ்சு, அரபு, போர்த்துகீசியம், போலந்து, ஜெர்மன் மற்றும் சீன மொழிகளில் விசுவாசிகளின் பிரார்த்தனைகள் நடைபெறும்.
இந்த கொண்டாட்டத்தில் சிஸ்டைன் தேவாலயத்தின் பாடகர் குழு, போப் ஃப்ரான்சிஸுக்காக கடைசியாக ஒரு முறை பாடும். தொடர்ந்து,போப் ஃப்ரான்சிஸின் உடல் புனித மேரி மேஜரின் பாப்பல் பசிலிக்காவிற்கு கொண்டு செல்லப்படும். இறுதி ஊர்வலம் தலைநகரின் தெருக்கள் வழியாக சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தை மெதுவாக கடக்கும்.
போப் ஃப்ரான்சிஸ் எங்கே அடக்கம் செய்யப்படுவார்?
சனிக்கிழமை நடைபெறும் இறுதிச் சடங்குக்குப் பிறகு, போப் ஃப்ரான்சிஸ் வாட்டிகனுக்கு வெளியே ரோமில் உள்ள செயிண்ட் மேரி மேஜர் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுவார். ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அங்கு அடக்கம் செய்யப்படும் முதல் போப் ஆவார். வாட்டிகனில் தனது உடலை அடக்கம் செய்யக்கூடாது என்பது போப் ஃப்ரான்சிஸின் விருப்பமாகும். கூடுதலாக, அடக்கம் செய்யப்படும் இடத்தில் தனது பெயரான 'ஃபிரான்சிசஸ்' என்பதை லத்தீன் மொழியில் பொறிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நேரடி ஒளிபரப்பு:
போப்பின் இறுதிச் சடங்கை எங்கு நேரடியாகப் பார்ப்பது என்பது பெரிய கேள்வி. நிகழ்வை நேரடியாக காண விரும்புவோருக்கு, வாட்டிகன் அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஏப்ரல் 26 அன்று உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பும். இந்தியாவில், இது இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு இருக்கும். பேஸ்புக் பக்கத்தில் உள்ள எங்கள் வலைத்தளமான vaticannews.va/en மற்றும் வத்திக்கான் மீடியாவின் யூடியூப் சேனலில் ஆங்கில வர்ணனையுடன் கிடைக்கும்.
இறுதிச் சடங்கில் யார் கலந்து கொள்வார்கள்?
போப் ஃப்ரான்சிஸின் இறுதிச்சடங்கில் 12 ஆட்சி செய்யும் மன்னர்கள் மற்றும் 55 நாட்டுத் தலைவர்கள், 14 அரசாங்கத் தலைவர்கள் மற்றும் பிற உயர் அதிகாரிகள் உட்பட குறைந்தது 130 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு தொடர்பான செய்திகளை சேகரிக்க, 4,000க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புனித சீயிடம் அங்கீகாரம் கோரியுள்ளனர்.
ஆசியா கண்டம்
இந்தியா: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
பிலிப்பைன்ஸ்: அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் மற்றும் முதல் பெண்மணி லிசா மார்கோஸ்
அமெரிக்க கண்டம்
அமெரிக்கா: அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப்
அர்ஜென்டினா: அதிபர் ஜேவியர் மிலி
பிரேசில்: அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும் அவரது மனைவி ஜான்ஜா
ஐக்கிய நாடுகள் சபை: ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்
ஐரோப்பா
ஃப்ரான்ஸ்: அதிபர் இம்மானுவேல் மக்ரோன்
ஜெர்மனி: அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் மற்றும் காபந்து அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்
ஹங்கேரி: அதிபர் தாமஸ் சுல்யோக் மற்றும் பிரதமர் விக்டர் ஓர்பன்
உக்ரைன்: அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கா
இங்கிலாந்து: அரச தலைவர் மூன்றாம் சார்லஸ் மன்னரையும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இளவரசர் வில்லியம்
அடுத்த போப் யார்?
புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை நீண்டது மற்றும் ரகசியமானது, இதில் உலகின் 252 கார்டினல்களில் பெரும்பாலானோர் பங்கேற்க ரோம் வருகிறார்கள். 252 பேரில், 80 வயதுக்குட்பட்ட 138 பேர் மட்டுமே மாநாட்டில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள். ஒவ்வொரு கார்டினலும் விருப்பமான வேட்பாளருக்கு வாக்குகள் பதிவான பிறகு, மூன்று ஆய்வாளர்கள் அவற்றைக் கணக்கிடுகிறார்கள். எந்த வேட்பாளரும் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறவில்லை என்றால், காலையிலும் பிற்பகலிலும் இரண்டு முறை வாக்களிப்பு தொடர்கிறது.