பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பு பின்னணியில் உக்ரைன்-இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடல் குறித்து ஜெலென்ஸ்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன்-இந்தியா உறவு
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். உரையாடலின் போது, உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின்னணியில் உக்ரைன்-இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார். உக்ரைனில் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ரஷ்யாவால் வாக்கெடுப்பு நடத்தப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. உக்ரேனிய பிரதேசங்களை சட்டவிரோதமாக இணைக்கும் முயற்சியை இலக்காகக் கொண்ட அனைத்து ஆக்கிரமிப்பாளர்களின் திட்டங்கள் பலிக்காது என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
ரஷ்யா பேச்சுவார்த்தையை விரும்பவில்லை
இந்த நிலையில், ரஷ்ய கூட்டமைப்பின் தற்போதைய தலைவருடன் உக்ரைன் எந்த பேச்சுவார்த்தையையும் நடத்தாது என்று விளாடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார். மேலும் எங்கள் அரசு எப்போதும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வை எட்ட நினைக்கிறது. ஆனால், ரஷ்யா பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பவில்லை. ஐ.நா. பொதுச் சபையின் அமர்வில் எனது உரையின் போது, அமைதிக்கான எங்கள் தெளிவான சூத்திரத்தை நான் கோடிட்டுக் காட்டினேன் என்று உக்ரைன் ஜனாதிபதி மேலும் கூறினார்.
இந்தியாவுக்கு நன்றி
உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா அளித்த ஆதரவிற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு விளாடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார், மேலும் இது போருக்கான நேரம் அல்ல என்று அவர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். உக்ரைனுக்கு இந்திய அரசும் தனியார் துறையும் வழங்கிய குறிப்பிடத்தக்க மனிதாபிமான உதவிகளை ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார். மேலும் விளாடிமிர் ஜெலென்ஸ்கியும் நரேந்திர மோடியும் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு பிரச்சினை குறித்து தனித்தனியாக விவாதித்தனர்.
உக்ரைனுக்கு அழைப்பு
உலகின் உணவுப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பவராக நமது அரசு தொடர்ந்து செயல்படத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வலியுறுத்தினார். இது தொடர்பாக, ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளின் ஆதரவும், முக்கியமாக இதியாவின் ஆதரவும் மிகவும் அவசியமானது என்று குறிப்பிட்டார். "ரஷ்யாவின் அணுசக்தி அச்சுறுத்தல், குறிப்பாக Zaporizhzhia NPP தொடர்பாக, உக்ரைனுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது" என்று விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். தனித்தனியாக, உக்ரைன் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். உரையாடலின் போது, வழக்கமான முழு அளவிலான உக்ரேனிய-இந்திய தொடர்புகளை ஆழப்படுத்துவதில் பரஸ்பர ஆர்வத்தை இருதரப்பும் குறிப்பிட்டன. இறுதியாக உக்ரைனுக்கு வருமாறு மோடியை ஜெலென்ஸ்கி அழைத்தார்.