முன்பெல்லாம் உணவகத்தில் உணவில் கரப்பான், எலி என உயிரினங்கள்தான் கிடைக்கும்.அதையும் கூட நம்மூர் ஆட்கள் அசால்ட்டாக எடுத்துப் போட்டுவிட்டு ‘அந்த மோர் ஊத்துப்பா பெருச்சாளி இருக்கானு பார்க்கனும்’ என்னும் கணக்காகச் சாப்பிடுவார்கள். ஆனால் யாராக இருந்தாலும் ஆசிட் உணவில் பரிமாறப்பட்டால் அதை உட்கொள்பவர்களுக்கு வாய், வயிறு, ஆசனவாய்  என அத்தனைப் பகுதியும் எரிந்துவிடும். பெரியவர்களுக்கே இப்படியென்றால் சின்னப்பிள்ளைகளுக்கு கேட்கவே வேண்டாம்...நினைத்துக் கூடப் பார்க்க முடியாது! 


பாகிஸ்தானில் ஒரு உணவகத்தில் பிறந்தநாள் விருந்தில் இரண்டு சிறார்களுக்கு தண்ணீர் பாட்டில்களில் ஆசிட் பரிமாறப்பட்டதால், லாகூர் உணவக மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


செப்டம்பர் 27 அன்று வரலாற்று சிறப்புமிக்க கிரேட்டர் இக்பால் பூங்காவின் 'பொயட் உணவகத்தில்' இந்த சம்பவம் நிகழ்ந்தது. சிறார்களுக்கு இன்னும் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




முதல் தகவல் அறிக்கையின்படி, அதன் நகல் பிடிஐயிடம் உள்ளது, முஹம்மது அடில் என்பவர் பொயட் உணவகத்தில் தனது குடும்பத்துடன் பிறந்தநாள் விழாவை கொண்டாடியதாகக் கூறப்படுகிறது.


“ஊழியர்கள் தண்ணீர் பாட்டில்களை பரிமாறும்போது என் மருமகன் அகமது அதைக் கொண்டு கைகளைக் கழுவினார். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் அழத் தொடங்கினார், மேலும் தண்ணீர் பாட்டிலில் அமிலம் இருந்ததால் அவரது கைகள் மற்றும் விரல்களில் காயங்கள் உண்டானதை நாங்கள் கவனித்தோம், ”என்று அடில் தனது புகாரில் கூறியுள்ளார்.


இதனிடையே மற்றொரு தண்ணீர் பாட்டிலில் ஆசிட்டை குடித்ததால் அவரது இரண்டரை வயது மருமகள் வஜிஹா வாந்தி எடுக்கத் தொடங்கினார்.இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு வஜிஹாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 336B (அரிக்கும் பொருளால் காயப்படுத்தப்பட்டதற்கான தண்டனை) கீழ் உணவக மேலாளர் மற்றும் ஐந்து ஊழியர்களுக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


"நாங்கள் உணவக மேலாளர் முஹம்மது ஜாவேதைக் கைது செய்துள்ளோம், மேலும் புகார்தாரரால் பரிந்துரைக்கப்பட்ட மற்றவர்களைக் கைது செய்ய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று காவல்துறை அதிகாரி தாஹிர் வகாஸ் திங்களன்று செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேட்டி அளித்தார்.


விசாரணை முடியும் வரை உணவகத்தையும் போலீசார் மூடியுள்ளனர் என்றார். "இது ஒரு விசித்திரமான சம்பவம், நாங்கள் அதை எல்லா கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்," என்று அதிகாரி மேலும் கூறினார்.


உணவகத்தில் தண்ணீருக்கு பதிலாக ஆசிட் கொடுத்த சம்பவம் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.