Pangea Ultima:  ”பாங்கேயா அல்டிமா” மனித இனத்தின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.


மாற்றத்தை நோக்கி பூமி:


இன்று பூமியில் காணக்கூடிய அனைத்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை அல்ல. அதாவது பூமியில் இருக்கும் பொருட்களின் தன்மை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். பூமி இப்போது மீண்டும் மாற்றத்தை நோக்கி நகர்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அதன் காரணமாக, பூமியில் அடுத்து என்ன மாற்றம் நிகழப் போகிறது என்ற கேள்வி எழுகிறது. பூமியில் ஏற்படும் இந்த மாற்றம் மனிதர்களையும் பாதிக்குமா என்பது இன்னும் பெரிய கேள்வியாக அமைந்துள்ளது.


விஞ்ஞானிகளின் கருத்து என்ன?


விஞ்ஞானிகளின் கருத்தின்படி,  பூமியில் ஏற்படும் மாற்றங்கள் அழிவை ஏற்படுத்தும். உண்மையில், சமீபத்தில் நேச்சர் ஜியோசைன்ஸில் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வொர்த் தலைமையில், எதிர்கால சூப்பர் கண்டம் மற்றும் பிற காலநிலை மாற்றங்களின் தாக்கத்தைக் கண்டறிய ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பூமியானது பாங்கேயா அல்டிமா வழியாக செல்ல உள்ளது என தெரியவந்துள்ளது.


பாங்கேயா அல்டிமா என்றால் என்ன


பாங்கேயா அல்டிமா என்பது எதிர்காலத்தில் பூமியின் கண்டங்களை மீண்டும் இணைக்கும் செயல்முறையைப் பற்றி பேசும் ஒரு கோட்பாடு ஆகும். இது குறிப்பாக கான்டினென்டல் டிரிஃப்ட் (தட்டு டெக்டோனிக்ஸ்) கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. உண்மையில், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் அனைத்து கண்டங்களும் ஒன்றாக இருந்தன. ஆனால் காலப்போக்கில் அவை தனித்தனியாக பிரிந்தன. பாங்கேயா அல்டிமா கோட்பாடு, வரலாறு மீண்டும் நிகழலாம் என்றும், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் கண்டங்கள் மீண்டும் ஒன்றிணையலாம் என்றும் கூறுகிறது. கடைசி சூப்பர் கண்டமான பாங்கேயா, சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து தான் தற்போதுள்ள கண்டங்கள் உருவானதாக கூறப்படுகிறது.


”பாங்கேயா அல்டிமா” நடந்தால் என்ன நடக்கும்


பாங்கேயா அல்டிமா நிகழ்ந்தால் பூமியில் மனிதர்கள் வாழ்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிடும். உண்மையில் இப்படி நடக்கும்போது இரண்டு கண்டங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும், அப்போது பூமியெங்கும் வலுவான நிலநடுக்கம் உணரப்படும். இதுவரை இல்லாத அளவுக்கு, கடலில் பிரமாண்ட சுனாமி வரும். பேரழிவு ஏற்படும். இதன் காரணமாக பூமியில் பல இடங்களில் இமயமலை போன்ற உயரமான மலைகள் உருவாகி பூமியின் சுற்றுச்சூழல் மாறுபடும். 40 முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவக்கூடும். இப்படி ஒரு அழிவுக்குப் பிறகும் சில மனிதர்கள் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது, ஆனால் இது நடக்கும் நாளில் கோடிக்கணக்கான உயிரினங்கள் பூமியில் இருந்து அழிந்துவிடும் என்பது உறுதி. இந்த கண்டம் வளிமண்டலத்தில் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிரகாசமான சூரியனை கொண்ட எரிமலைகள் நிறைந்ததாக இருக்கும். பாலூட்டிகள் உயிர்வாழ முடியாத அளவுக்கு நிலம் மிகவும் சூடாக இருக்கும். குறைந்த அளவிலான உணவு மற்றும் தண்ணீருடன் சுற்றுச்சூழல் பெரும்பாலும் மோசமானதாக இருக்கும்.


எப்போது, எங்கு உருவாகலாம்?


பாங்கேயா அல்டிமா அடுத்த 250 மில்லியன் ஆண்டுகளில் உருவாகக்கூடிய ஒரு சூப்பர் கண்டம். அட்லாண்டிக் பெருங்கடல் சுருங்கி, ஆப்ரோ-யூரேசியக் கண்டம் அமெரிக்காவுடன் மோதும் போது சூப்பர் கண்டம் உருவாகலாம். இது பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருக்கும் என கருதப்படுகிறது.