இயற்கை கொடுத்த ரம்யமான, அழகிய கொடைகளாகக் கொண்டாடப்படும் இடங்களில் ஒன்று, இரண்டரை கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கை. உரிமைப் போராட்டம், உள்நாட்டு யுத்தம், இனப் படுகொலை எனப் பல்வேறு காரணிகளுக்காக இலங்கை அறியப்பட்டிருந்தாலும், அந்தத் தீவின் சுற்றுலா, 4 மாதங்களுக்கு முன் வரை உலகப் புகழ்ப் பெற்றது. ஆனால், இன்றோ, பசி, பட்டினி, போராட்டம், ரணகளம் என நசிந்துப் போயிருக்கிறது குட்டித்தீவு இலங்கை.


UNP எனும் ஐக்கிய தேசிய  கட்சியின் ஒரே ஒரு எம்பியாக இருந்தாலும், நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க பிரதமராகப் பதவியேற்றேன் எனக்கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்க, கடந்த அரசின் பொறுப்பற்ற நிர்வாகமே, இன்றைய சீர்குலைவுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமல்ல, பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டுள்ளதாக நம்பிக்கை அளித்த அவர், வரப்போகும் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் உணவுப்பஞ்சம் நிச்சயம் என பெரும் குண்டைப்போட்டுள்ளார். இது, மக்களிடையே கூடுதல் அச்சத்தையும், பொருட்களை வாங்கி பதுக்கி வைக்கும் தன்மையினையும் அதிகரிக்க வைத்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம். 




தேவையான உரப்பொருட்கள் இல்லாததால், உணவுப் பொருட்கள் விளைச்சலில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு, அது பஞ்சமாக மாறும் என்கிறார். ஆனால், இன்றைய நிலைமையே அப்படித்தான் இருக்கிறது எனக் கூறுகின்றனர் இலங்கைவாசிகள். தலைநகர் கொழும்பு முதல் குக்கிராமம் வரை எல்லா இடங்களிலும், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் பெரும் அவதிக்கு உட்பட்டுள்ளனர். வசதி படைத்தவர்களும் நடுவீதிக்கு வரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதைதான் தற்போதைய நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.


பெட்ரோல், டீசல் விலை உயர்வும் தட்டுப்பாடும் சிறிது கூட  குறையவில்லை. சமையல் கேஸும் மண்ணெண்ணையும் பெரும் பற்றாக்குறை . சில இடங்களில் கிடைக்கவே இல்லை.  மின்சாரமும் வெகு நேரத்திற்கு இருப்பதில்லை. இந்த பற்றாக்குறை பட்டியலில் தற்போது இணைந்திருப்பது , தண்ணீரும் சரியாக வருவதில்லை. 




மரக்கறி, இறைச்சி, அரிசி, பருப்பு, எண்ணெய், பால் என அத்தியாவசிய பொருட்களும் தற்போதை கைக்கு எட்டாத கனியாகவே காட்சி அளிக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு வேளை உணவு கூட, சீராக உண்ண முடியாத நிலையில்தான் பெரும்பாலோர் உள்ளனர் என வேதனைப்படுகின்றனர் கொழும்புவாசிகள். 


தமிழர்கள் செறிவாக இருக்கும் வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், மலையகப் பகுதிகளில் நிலைமை, சற்று ஆறுதல் தரும் வகையில் இருந்தாலும், அங்கும் விரைவில் மோசமான சூழல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், வடக்கு, கிழக்குப் பகுதிகளில், இதுபோன்ற பல்வேறு நிலைகளை ஏற்கெனவே யுத்தக்காலத்தில் கண்டிருப்பதால், அதற்கேற்ப நிலைமையை சமாளிக்கின்றனர்.


அமெரிக்க டாலர்கள் மதிப்பில் பல பில்லியன் கடனைத் திருப்பி தர முடியாத சூழலில், கிட்டத்தட்ட எங்கள் நாடு திவாலாகிவிட்டது என சொல்லாமல் சொல்லி இருக்கிறார் இலங்கை மத்திய வங்கியின் கவர்னர் கலாநிதி நந்தலால் வீரசிங்க. இப்படியொரு நிலையில், மக்களுக்கு நம்பிக்கைத் தரும் வகையில் எந்தவொரு நகர்வும் நடைபெறவில்லை என்பதுதான் தற்போது இலங்கையின் தொடர் போராட்டங்களுக்கு மையக் காரணமாக இருக்கிறது.


இந்த மாத ஊதியத்தை அரசாங்க ஊழியர்களுக்கு தர முடியுமா, தனியார் ஊழியர்களுக்கு வேலை தொடருமா, அன்றாட செலவுகளுக்குக்கூட நிதி ஒதுக்க முடியுமா என இலங்கையின்  நிதி பொருளாதாரமே கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது. 




ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவுடன் நட்பு நாடாக முன்பு காட்சியளித்த சீனா இன்று, கந்து வட்டிக்காரனை விட மிக மோசமாக நடந்துக் கொள்வதாக குற்றம்சாட்டுகிறார்கள் இலங்கைவாசிகள். தற்போது இந்தியா மட்டுமே இலங்கைக்கு உதவுகிறது என்றும் இந்திய அரசு  மட்டுமல்ல, தமிழக அரசும்  அத்தியாவசிய பொருட்களை கப்பலில் அனுப்பி, உண்மையான நண்பர்கள் யார் என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் எனக்கூறும் இலங்கையர்கள், ஜப்பானும் தற்போது இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளதாகக் கூறுகின்றனர்.


இன்றைய நிலை மற்றும் அடுத்த சில மாதங்களுக்கான பொருளாதார அழுத்தங்கள் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது, பிரச்சினை இல்லா நிலை வருவதற்கு குறைந்தது ஓராண்டு ஆகும் என்றும் பழைய இயல்பு நிலைக்கு இலங்கை திரும்ப, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆகும் என்றும்  இலங்கையின் பல்வேறு அரசியல் தலைவர்களும் கூறுகின்றனர். 


தொடர் போராட்டங்கள், நெருக்கடிகள் என சிக்கி சின்னாப்பின்னமாகிக் கொண்டிருக்கும் இலங்கையில் தற்போதைய ஒரே ஆறுதல் அரசியல் நெருக்கடி குறைந்து, ஓரளவு ஸ்திரத்தன்மை உருவாகி வருகிறது. இந்த அரசின் செயல்பாடும், சர்வதேசங்களின் ஒத்துழைப்பும் மக்களின் நம்பிக்கையும் ஒன்றிணையும் போது, நிச்சயம், இலங்கை மீண்டும் செல்வாக்குடன் மிளிர்ந்தெழும்.