சமூகத்தில் இருந்து தனித்து வாழும் போக்கு மக்களிடையே அதிகரித்து வந்துள்ளது. இப்படி, மக்கள் தனிமைப்படுத்தி கொண்டு வாழும் போக்கு ஹிக்கிகோமோரி என அழைக்கப்படுகிறது. ஜப்பானில் இந்த போக்கு மிக வேகமாக வளர்ந்து வருவதாக அரசு தரப்பு தகவல் தெரிவிக்கிறது. 


ஜப்பானில் அதிகரிக்கும் போக்கு:


ஜப்பானில் உழைக்கும் வயதில் உள்ள 15 லட்சம் பேர் சமூகத்தை தவிர்த்து தனிமைப்படுத்தி கொண்டு வாழ்ந்து வருவதாக அரசு தரப்பு கூறுகிறது. இப்படி வாழ்ந்து வருபவர்களில் 20 சதவிகிதத்தினர் கொரோனா ஏற்படுத்திய அழுத்தம் காரணமாக ஹிக்கிகோமோரி போக்கை கடைபடித்து வருகின்றனர்.


கொரோனா பெருந்தொற்று உலகை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆட்டிப்படைத்து மக்களை அலறவிட்டது. தற்போது, அதன் தீவிரம் குறைந்திருந்திருந்தாலும் அது ஏற்படுத்திவிட்டு சென்ற தாக்கம் ஹிக்கிகோமோரி போக்கை கடைபிடிப்பதற்கு காரணமாக மாறியுள்ளது.


அரசு தரப்பு அதிர்ச்சி தகவல்:


கடந்த நவம்பர் மாதம், 10 வயதில் இருந்து 69 வயது வரையிலான 30 ஆயிரம் பேரிடம் அமைச்சரவை அலுவலகம் கருத்துகணிப்பு நடத்தியது. அதில், 15 வயதில் இருந்து 62 வயது வரையிலான 2 சதவிகிதத்தினர் ஹிக்கிகோமோரி போக்கை பின்பற்றி வருவதாக கூறியுள்ளனர்.


சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தி கொண்டு தனித்து வாழ்வதற்கு உறவு சிக்கலும் பணியில் இருந்து தூக்கப்பட்டதும் அல்லது பணியில் இருந்து தானாக வெளியே வந்ததுமே காரணம் என ஹிக்கிகோமோரி போக்கை கடைபிடிக்கும் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்ட 40 முதல் 64 வயது வரையில் உள்ளவர்களில், 44.5% பேர் வேலையே விட்டு சென்றதே ஹிக்கிகோமோரி போக்கை பின்பற்றுவதற்கு காரணம் என கூறியுள்ளனர்.


அதற்கு அடுத்தபடியாக, 20.6% பேர், ஹிக்கிகோமோரி போக்கை கடைபிடிப்பதற்கு கொரோனா பெருந்தொற்று காரணம் சொல்லியுள்ளனர். இப்படி தனிமைப்படுத்தி கொண்டு வாழும் போக்கு மக்களிடையே அதிகரித்திருப்பது பெரும் கவலையாக மாறியுள்ளது. எனவே, உள்ளூர் நிர்வாகம் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது.


அதன் ஒரு பகுதியாக, ஹிக்கிகோமோரி மக்களை சமூகத்துடன் இணைக்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய உள்ளது எடோகாவா நகர நிர்வாகம். தனித்து வாழும் மக்களை, பிற மக்களுடன் இணைக்கும் சமூக நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் முதல் நடத்தப்பட உள்ளது.


எடோகாவா நகரத்தில் மட்டும் மாணவர்கள் உள்பட 9,000 பேர் தனித்து வாழ்ந்து வருகின்றனர். தங்களை ஹிக்கிகோமோரி என அழைத்து கொள்ளும் மாணவர்கள், வகுப்புகளுக்கு செல்வதை கூட நிறுத்திவிட்டனர். 


ஹிக்கிகோமோரி என்றால் என்ன?


சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தி கொண்டு வாழும் போக்கு ஜப்பானில் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தனிநபர்கள், பொதுவாக இளைஞர்கள், சமூக தொடர்புகளிலிருந்து விலகி, நீண்ட காலத்திற்கு, சில நேரங்களில் பல ஆண்டுகள் கூட தங்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். இது, சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.