காலநிலை மாற்றத்தை அடுத்து தீவிர வானிலை நிகழ்வுகள் என்பது மிகவும் சர்வ சாதாரணமானதாகிவிட்டது. மனிதக் காரணிகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தீவிர வானிலை நிகழ்வுகளின் நடக்கும் இடைவெளியும் (Interval)குறைந்துகொண்டே வருகின்றன. நான்கு அமெரிக்க மாகாணங்களான நெப்ராஸ்கா, மினசோட்டா, சான் டியாகோ மற்றும் இல்லினாய்ஸ் ஜூலை 5 அன்று 'டெரெகோ' எனப்படும் சுழற்புயல் தாக்கியது.
இந்த வகைப் புயல் பெரும்பாலும் அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிகழ்கின்றன. இந்தப் புயலை அடுத்து அந்த மாகாணங்களின் வானம் பச்சையாகக் காணப்பட்டது. வானத்தை பச்சை நிறமாக மாற்ற வழிவகுத்த புயல் டெரெகோ என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் தேசிய வானிலை சேவையின்படி, இது "வேகமாக நகரும் மழை அல்லது இடியுடன் கூடிய ஒரு பரவலான, நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் ஒருவகை சுழற் புயல்" ஆகும். டெரெகோ என்ற சொல் ஸ்பானிஷ் வார்த்தையான 'la derecha' என்பதிலிருந்து வந்தது, அதாவது 'நேராக' என்று பொருள்.
மே 8, 2009ல் "சூப்பர் டெரெகோ" அமெரிக்காவைத் தாக்கியது. இது எப்போதும் கவனிக்கப்படாத மிகவும் தீவிரமான மற்றும் அசாதாரணமான டெரெகோக்களில் ஒன்றாகும். இந்தப் புயல் உருவானதை அடுத்து கன்சாஸிலிருந்து கென்டக்கி வரை காற்றின் வேகம் 170 கிமீ / மணி வரை எட்டியது. இதை அடுத்து தற்போதுதான் மீண்டும் அது போன்ற ஒரு புயல் தாக்கியுள்ளது. மார்வல் சூப்பர் ஸ்டார் ஹல்க் நிறத்தில் புயல் உருவாவதெல்லாம் சூப்பர்ஹீரோ, சயின்ஸ் ஃபிக்ஷன், ஆக்ஷன் திரைப்படங்கள் போல அமெரிக்காவில் மட்டுமே நிகழும் போல.