உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையே போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ரஷ்ய தாக்குதலில் 198 உக்ரைனியர்கள் உயிரிழந்திற்பதாக உக்ரை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்தப் போர் காரணமாக சிவில் விமான போக்குவரத்திற்கு உக்ரைன் நாடு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அங்கு தங்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் ரூமேனியா மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை அனுப்பியுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் சிக்கி தவித்து வரும் இந்திய மாணவிகள் உதவி கேட்டு பகிர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரைச் சேர்ந்த அந்த இரு மாணவிகள், உக்ரைனில் இருந்து தங்களை மீட்குமாறு இந்திய அரசிடம் உதவி கேட்டு பதிவிட்டுள்ளனர். உணவு, குடிக்க தண்ணீர் இல்லாமல் இந்திய மாணவ மாணவிகள் சிக்கி தவிப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவில், “எங்களுக்கு உதவி வேண்டும். எங்களுக்கு உதவி செய்வதாக தெரியவில்லை. உயர் அதிகாரிகள் யாரிடமும் நாங்கள் பேசவில்லை. சிறப்பு விமானங்கள் எதுவும் அனுப்பப்படவில்லை. எங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்” என மேக்னா என்ற மாணவி கோரிக்கை வைத்திருக்கிறார். அதே வீடியோவில் பேசிய மற்றொரு மாணவியான ரக்ஷா, ”15,000-க்கும் அதிகமான இந்திய மாணவ மாணவிகள் இங்கு சிக்கியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை பகிர்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, “இதை பார்க்கும்போது மனது பதைபதைக்கிறது. விரைவில் அவர்களை மீட்டு வர வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்
இந்தியர்கள் அனைவரும் அதிகாரிகளிடம் அறிவிக்காமல் எல்லைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் 24 மணி நேரம் இயங்கக்கூடிய உதவி எண்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்