ரஷ்ய - உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன. இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உக்ரைன் போர் குறித்து விவாதத்தின்போது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை விமர்சித்துள்ளன. அப்போது, கூட்டத்தில் இருந்து ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வெளிநடப்பு செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


 






செர்ஜி லாவ்ரோவ் கூட்டத்திற்கு தாமதமாக வந்துள்ளார் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பின்னர், உரை நிகழ்த்திய உடனேயே செர்ஜி காத்திருக்காமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.


இச்சம்பவம் குறித்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளேவர்லி கூறுகையில், "அவர் அறையை விட்டு வெளியேறினார். இதில், எனக்கு ஆச்சரியமில்லை. ஐ.நா. சபை ஒன்றாக சேர்ந்து கண்டனம் விடுப்பதை லாவ்ரோவ் கேட்க விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன்" என்றார்.


இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பேசுகையில், "இதற்கு, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பொறுப்பு ஏற்க வேண்டும். நாங்கள் இங்கு நிலைநிறுத்தக் கூடிய சர்வதேச ஒழுங்கு நம் கண் முன்னே துண்டாடப்படுகிறது" என்றார்.


இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல்முறையாக உக்ரைனில் ரஷிய மக்களை குடியேற்ற புதின் புதன்கிழமை அன்று உத்தரவிட்டிருந்தார். உக்ரைன் நிலப்பரப்பை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்தை ஆதரித்து பேசிய அவர், ரஷியாவை பாதுகாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் தான் பொய் சொல்லவில்லை என்றும் மேற்குலக நாடுகளுக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.


கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததை தொடர்ந்து, இப்போர் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியது. குறிப்பாக, அணு ஆயுத பயன்பாடு குறித்து புதின் வெளிப்படையாக பேசியுள்ள நிலையில், ஹங்கேரி அளவில் உக்ரேனிலிருந்து ஒரு பகுதியை இணைக்கும் திட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளித்தார். மேலும், 300,000 ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


ரஷியா மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்றியுள்ள புதின், "நமது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தப்பட்டால், ரஷ்யாவையும் நம் மக்களையும் பாதுகாக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என்பதில் சந்தேகமில்லை. நான் பொய் சொல்லவில்லை" என்றார்.


எந்த வித ஆதாரங்களை வெளியிடாமல் ரஷியாவை அழிக்க மேற்குலக நாடுகள் திட்டமிட்டு வருவதாக குற்றம் சாட்டிய புதின், "ஆக்கிரோஷமான ரஷ்ய-விரோதக் கொள்கையில், மேற்குலக நாடுகள் அனைத்து எல்லையையும் மீறிவிட்டன. இது ஒரு முட்டாள்தனம் அல்ல. அணுவாயுதங்களை வைத்து நம்மை அச்சுறுத்த முயல்பவர்கள், அந்த ஆயுதங்கள் அவர்களை நோக்கி திரும்பிச் செல்லக்கூடும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்" என்றார்.


இது, மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கலாம். உக்ரைன் போர் காரணமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், போரின் விளைவாக ஏற்பட்டுள்ள பணவீக்கம் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு, மேற்கு நாடுகளுடன் மிக மோசமான மோதலைத் இப்போர் தூண்டியுள்ளது. இதில், அணு ஆயுதப் போராக மாறிவிடுமோ என்று பலர் அஞ்சுகிறார்கள்.