சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. காட்டுக்கு நடுவே ஒரு கூட்டமாக, ஒரு குடும்பமாக யானைகள் படுத்து உறங்குவதும் அதில் ஒரு குட்டி யானை சேட்டை செய்வதும்தான் வைரலுக்கு காரணம். மீம் கண்டெண்டாக அனைவரது மனதிலும் இடம் பிடித்த யானைகளின் வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டது.


சீனாவின் யுனான் மாகாணத்தின் ஒரு காட்டுப்பகுதி யானைகள் சரணாலயமாக உள்ளது. அங்கிருந்த யானைகள் 17 மாதங்களுக்கு முன்பு மக்கள் பகுதிகளில் இடம்பெயரத் தொடங்கின. அதுவும் ஒரு கூட்டமாக. மெதுவாக நடந்தாலும், நீண்ட தூரம் நடக்கும் குணமுடைய யானைகள் இதுவரை 500 கிமீக்கும் அதிகமான தூரத்தை கடந்துவிட்டன. காடுகள், மலைகள் என யானைகள் கால்படாத இடமே இல்லை. ஆனால் யானைகளின் இந்தப் பயணத்தில் கட்டிடங்களும், விளை நிலங்களும் பாதிக்கப்பட்டன. தங்கள் இடத்தை விட்டு நகரும் யானைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு வரலாம் என யோசித்த சீன அரசு யானைகளின் பயணத்தை தீவிரமாக கண்காணித்தது. 




இதற்காக 25000 போலீசார் பணியில் இருந்து யானைகளை கண்காணித்தனர். கேமரா, ட்ரோன் என யானைகளை பின் தொடர்ந்தது சீன அரசு. எப்படியாவது யானைகளை மென்ங் யான் சி காப்பு காடுகளுக்கு அனுப்பிவிட வேண்டுமென சீனா நினைத்தது. ஆனால் யானைகள் அப்படி நினைக்கவில்லை. தங்கள் மனம் போன போக்கில் தங்களது பாதையை தேடிச் சென்ற யானைகள் தற்போது மீண்டும் தங்கள் வாழ்விடத்துக்கே திரும்பிவருகின்றன. இதனால் சீன அரசு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. யானைகள் எந்த தொந்தரவு இல்லாமல் தங்கள் வாழ்விடங்களுக்கு செல்ல வேண்டுமெனதற்காக சீன அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் யானைகள் செல்லும் வழித்தடத்தில் இருந்து அப்புறப்படுத்தியட்து சீன அரசு. தற்காலிக பாதைகளை உருவாக்கி யானைகளை அதன் போக்கில் அனுப்பி வைக்கிறது சீனா.




யானைகள் திடீரென தங்கள் வாழ்விடத்தில் இருந்து கிளம்பியது ஏன்? ஏன் ஊருக்குள் நுழைந்து மீண்டும் தன் வாழ்விடத்தை நோக்கியே செல்கின்றன? என்ற எந்த விவரத்தையும் மனிதர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. வாழ்விடத்தை மாற்ற நினைத்த யானைகள் நீண்ட பயணத்துக்கு பிறகு மீண்டும் பழைய வாழ்விடத்தை நோக்கியே செல்லலாம் என யூகிக்கின்றனர் வன ஆர்வலர்கள். ஆனால் உண்மை என்னவென்று பெரிய சுற்றுலா சென்று மீண்டும் வீடுகளுக்கு செல்லும் யானைகளுக்கு மட்டுமே தெரியும்.