உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல், அடுத்தாண்டு நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
சூடுபிடித்த அமெரிக்க அதிபர் தேர்தல்:
பைடனை தவிர்த்து, ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். வேட்பாளர் போட்டியில் போட்டியிட்டு, சொந்த கட்சியினர் மத்தியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறதோ அவரே, கட்சியின் சார்பில் அமெரிக்காவில் தேர்தலில் நிற்க முடியும்.
ஜனநாயக கட்சியை போல, குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்டோர் அதிபருக்கான வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர்களை தவிர, இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி ஆகியோரும் வேட்பாளர் தேர்வில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
துணை அதிபர் வேட்பாளராகிறாரா விவேக் ராமசாமி?
இதில், மற்றவர்களை காட்டிலும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவரும் தொழிலதிபருமான விவேக் ராமசாமிக்கு பல்வேறு தரப்பினரின் ஆதரவு பெருகி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில் விவேக் ராமசாமி குறித்து முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது. துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட விவேக் ராமசாமி நல்ல தேர்வாக இருப்பார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் மாஸ்டர் ஸ்ட்ரோக்:
தன்னுடைய துணை அதிபர் வேட்பாளராக டிரம்ப் யாரை அறிவிப்பார் என்பது குறித்து பல்வேறு விதமான ஊகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், விவேக் ராமசாமி குறித்து அவரது கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நேர்காணலின்போது விரிவாக பேசிய டிரம்ப், "அவர் [விவேக் ராமசாமி] புத்திசாலி. அவர் ஒரு இளைஞன்.
அவருக்கு நிறைய திறமை இருக்கிறது. அவர் மிக, மிக, புத்திசாலி. அவர் நல்ல ஆற்றல் பெற்றவர். எதிர்காலத்தில் நல்ல இடத்திற்கு போகலாம். நான் உங்களுக்கு சொல்கிறேன். அவர் உண்மையிலேயே தனித்துவம் வாய்ந்தவர் என்று நான் நினைக்கிறேன். ஒரு தலைமுறையில் நான் சிறந்த அதிபர் என்று யாரேனும் சொன்னால். அப்படிப்பட்ட ஒருவரை நான் விரும்ப வேண்டும்" என்றார்.
சமீபத்தில் வெளியான கருத்துகணிப்புகளின்படி, குடியரசு கட்சியினர் மத்தியில் விவேக் ராமசாமிக்கு ஆதரவு பெருகி வருவது தெரிய வந்துள்ளது. புளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் சம பலத்துடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொள்கின்றனர். டிரம்ப், 56 சதவகிதத்தினரின் ஆதரவுடன் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.