ஆப்கானிஸ்தானில் கடந்தாண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. தலிபான்கள் ஆட்சியில் முன்பு இருந்தபோது விதிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு எதிராக அளவுக்கதிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவது உலக நாடுகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.


இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தற்போது அந்த நாட்டு அரசாங்கம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தலிபான்கள் ஆட்சியின் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் நேடா முகமது நதீம் அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைகழகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ மறு அறிவிப்பு வரும் வரை பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும் உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


ஆப்கானிஸ்தானில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவால் உலக நாடுகள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர். பெண்களின் கல்விக்காகவும், சுதந்திரத்திற்காகவும் உலக நாடுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் பிற்போக்குத் தனமான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு வருவது பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கல்வித்துறை செய்தி தொடர்பாளர் ஜியால்லா ஹாஷிமியும் இந்த உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளார்.


கதறியழும் பெண்கள்


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் கல்வி நிறுவனங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. வகுப்புகளில் ஆண் – பெண் பாரபட்சம் கடுமையாக காட்டப்பட்டு வருகிறது. பெண்களுக்கு பெண் பேராசிரியைகள் அல்லது வயதான பேராசிரியர்கள் மட்டுமே பாடம் நடத்த அனுமதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே நாடு முழுவதும் பெரும்பாலான  பெண்களுக்கான பள்ளிக்கல்வி தடை செய்யப்பட்டுள்ளது.






இந்நிலையில் தலிபான்கள் உத்தரவால் அந்நாட்டு பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால், மாணவிகள் கண்ணீருடன் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியயேறும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  சில மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து கதறி அழுகின்றனர். தலிபான்களின் நடவடிக்கையால் மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.