ட்விட்டர் நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் அலுவலகத்தின் தரையிலேயே படுத்துறங்கும் புகைபடத்தை அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 


அலுவலகத்தின் அறையில் வைக்கப்பட்டிருந்த மேஜை மற்றும் நாற்காலிகளுக்கு மத்தியில் தூங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட பை போர்வையில் கண்களை மூடும் முகமூடியை போட்டு கொண்டு ட்விட்டரின் தயாரிப்பு மேலாண்மை இயக்குனர் எஸ்தர் க்ராஃபோர்ட் தூங்குவது புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.


இந்த புகைப்படத்தை ட்விட்டர் ஸ்பேஸின் தயாரிப்பு மேலாளரான இவான் ஜோன்ஸ் பகிர்ந்துள்ளார். அதில், "எலானின் ட்விட்டரில் உங்கள் முதலாளியிடமிருந்து உங்களுக்கு ஏதாவது தேவைப்படும்போது" என்ற தலைப்புடன் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 






இந்த புகைப்படத்தை க்ராஃபோர்ட் ரீட்வீட் செய்துள்ளார். "கொடுக்கப்பட்ட பணியை காலக்கெடுவுக்குள் முடிப்பதற்காக உங்களின் அணி இரவு பகல் பாராமல் உழைக்கும்போது, எங்கு உழைக்கிறோமோ அங்கேயே படுத்துறங்க வேண்டும்" என அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பல்வேறு விதமான எதிர்வினைகள் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.


"சிலர் தங்கள் மனதை இழக்கிறார்கள் என்பதால் நான் விளக்க விரும்புகிறேன். கடினமான காரியங்களுக்கு தியாகம் தேவைப்படுகிறது (நேரம், ஆற்றல் போன்றவை). உலகம் முழுவதும் எங்களின் நிறுவனத்தின் ஆட்கள் உள்ளனர். அவர்கள் வாழ்க்கையில் புதிதாக ஒன்றைக் கொண்டுவருவதற்கு முயற்சி செய்கிறார்கள். 


அதனால், அவர்களுக்காக போய் நிற்பதும் குழுவிற்கு எந்த தடையும் வந்து சேராமல் பார்த்து கொள்வதும் முக்கியம். நான் இங்கு ட்விட்டரில் வியக்கத்தக்க திறமையான மற்றும் லட்சியம் கொண்டவர்களுடன் வேலை செய்கிறேன். இது ஒரு சாதாரண தருணம் அல்ல. இங்கு, ஒரு பெரிய வணிக, கலாசார மாற்றம் நடந்து 1 வாரத்திற்கும் குறைவான நாள்கள் ஆகிறது.


தயாரிப்பு, வடிவமைப்பு, பொறியாளர், சட்டம், நிதி, சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து செயல்பாடுகளையும் தாண்டி மக்கள் பணி செய்து வருகிறார்கள். நாங்கள் ஒரே அணியை சேர்ந்தவர்கள். அதை வெளிப்படுத்த #LoveWhereYouWork என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ட்வீட் செய்தோம். அதனால்தான், நான் #SleepWhereYouWork என ரீட்வீட் செய்தேன். 


நாங்கள் பல மாத கொந்தளிப்புக்கு மத்தியில் நிறுவனம் பொது கையகப்படுத்துதலுக்கு உள்ளாகும் சூழலில் இருந்தோம். ஆனால், நாங்கள் தொடர்ந்து முன்னேறி செல்கிறோம். எங்கள் வலிமை மற்றும் பின்னடைவு குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.


ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து, முன்பை விட அதிக நேரம் வேலை செய்து வருகிறார்கள். வாரத்திற்கு ஏழு நாட்களும் 12 மணி நேர ஷிப்ட்களிலும் வேலை செய்ய வேண்டும் என எலான் மஸ்க் ட்விட்டர் மேலாளர்களை கேட்டு கொண்டதாக செய்தி வெளியானது.