உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து வரும் நிலையில், உக்ரைனின் கீவ் நகரத்தில் மேற்குப் பகுதியில் உள்ள சிறிய கிராமம் ஒன்று வேண்டுமென்றே வெள்ளத்தை உருவாக்கி, புதைகுழிகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றை உருவாக்கி கீவ் மீதான தாக்குதலைத் தடுத்துள்ளது. இந்த வெள்ளம் காரணமாக நிலவறைகள், வயல்கள் ஆகியவை நீருக்குள் மூழ்கினாலும், இந்தத் தியாகம் அதற்கேற்ற மதிப்பைக் கொண்டது என கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். 


உக்ரைன் நாட்டில் டெமிடிவ் பகுதியில் போர் நிகழ்ந்து கொண்டிருந்த போது, உக்ரைன் படையினர் அங்குள்ள அணையைத் திறந்து விட்டதில், இர்பின் நதி அருகில் இருந்த கிராமம், சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம் ஆகியவற்றில் வெள்ளமாக மாறியது. உக்ரைன் நாட்டுக்குள் புகுந்துள்ள ரஷ்ய ராணுவத்தினரையும், அவர்களின் பீரங்கிகளையும் தடுப்பதற்காக இவ்வாறு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. 


டெமிடிவ் நகரைச் சேர்ந்த வோலோடிமிர் ஆர்டெம்சுக் என்ற 60 வயது முதியவர் இந்த முடிவை வரவேற்றுள்ளார். `ஆம், இது மிகச் சரியாக முடிவு.. ரஷ்யப் படையினர் இந்த சிறிய ஆற்றைக் கடந்து கீவ் நகரத்திற்குள் சென்றால் என்னவாகும்?’ என அவர் கூறியுள்ளார். 



அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதான அலெக்சாண்டர் ரிபால்கோ சுமார் மூன்றில் ஒரு பகுதி வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கூறியுள்ளார். 


இந்த வெள்ளத்தை ஏற்பத்தி சுமார் இரண்டு மாதங்கள் கழிந்துள்ள நிலையில், அணையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்னும் அதன் விளைவுகளை எதிர்கொண்டு வருகின்றனர். அருகில் உள்ள பகுதிகளுக்குச் செல்வதற்காக படகுகளைப் பயன்படுத்துவது, நீரில்லாத நிலப் பகுதிகளில் மலர்கள், காய்கறிகள் முதலானவற்றை அறுவடை செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே இருக்கும் சதுப்பு நிலங்களை குழந்தைகள் விளையாடுவதற்காகப் பயன்படுத்தி வருகின்றனர். 


உக்ரைன் நாட்டில் ரஷ்யாவின் படையெடுப்பு தற்போது மூன்று மாதங்களை எட்டியுள்ளது. சுமார் 1000 குடிமக்கள் இந்தப் போர் காரணமாக இறந்துள்ளதோடு, லட்சக் கணக்கான உக்ரைன் மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு தப்பி ஓடியுள்ளனர். பல்வேறு நகரங்கள் இந்தப் போரில் அழிக்கப்பட்டுள்ளன. 



உக்ரைன் நாட்டை பாசிஸ்ட்களிடம் இருந்து காப்பதற்காக சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் அரசு, மேற்கு நாடுகளும் இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை எனவும், ரஷ்ய அரசு வேண்டுமென்றே வன்முறையில் ஈடுபட்டு வருகிறது எனவும் தெரிவித்து வருகின்றனர். 


டோன்பாஸ் நகரத்திற்கான போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யப் படையினர் கடந்த மே 15 அன்று உக்ரைன் நாட்டில் கிழக்குப் பகுதியில் உள்ள உக்ரைன் படைகளைச் சுற்றி வளைத்திருப்பதாக சமீபத்திய தகவல்கள் வெளிவந்துள்ளன.