ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் என்கிற எண்ணெய் மற்றும் எரிவாயு உரிமத்துக்கான எதிர்ப்பாளர்கள் திங்கட்கிழமை மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மெழுகு உருவத்தின் முகத்தில் ஒரு கஸ்டர்ட் பையை வீசி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டனர்.


"மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடந்த இந்த சம்பவத்தில், காலை சுமார் 10:50 மணி அளவில் இரண்டு பேர் சிலை மீது உணவை வீசினார்கள் இதனை அடுத்து, நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். அவர்கள் இருவரும் சிலைக்கு சேதம் விளைவித்ததற்காக கிரிமினல் வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று அருங்காட்சியகப் போலீஸ் ட்வீட் செய்தது.


அனைத்து புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு உரிமங்களுக்கான ஒப்புதல்களையும் நிறுத்த வேண்டும் என்று காலநிலை ஆர்வலர்கள் அரசிடம் கோரி வருகின்றனர். அதன் ஒருபகுதியாகத்தான் இந்த எதிர்ப்பு.


போராட்டக்காரர்கள் விடுத்துள்ள அறிக்கையில், "எங்கள் சுதந்திரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். காரணம், இந்த பசுமையான மற்றும் வளமான நிலத்தை நாங்கள் பாதுகாக்க விரும்புகிறோம், இது நம் அனைவருக்குமான நிலம். எங்கள் கோரிக்கை மிகவும் எளிது: புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான உரிமத்தை நிறுத்துங்கள், அது ஒரு துண்டு கேக் வெட்டி எடுப்பது போன்றதேஅதை உணர்த்தவே இந்த எதிர்ப்பு." எனக் கூறியுள்ளனர்,


வைரலான வீடியோ கீழே...