பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இருந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென விலகியதை அடுத்து புதிய பிரதமராக ரிஷி சுனக் வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.


லிஸ் டிரஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அடுத்த பிரதமராகும் போட்டியில் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழ் சபை தலைவர் பென்னி மோர்டான்ட் குதித்தார். ஆனால், அவரால் தகுந்த ஆதரவை பெற முடியாமல் உள்ளது.


பிரிட்டன் பிரதமராவதற்கு 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது, ரிஷி சுனக்கிற்கு 142 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. கொடை காலத்தில் நடைபெற்ற பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் லிஸ் டிரஸிடம் ரிஷி சுனக் தோல்வி அடைந்தார்.


ஆனால், கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் லிஸ் டிரஸ் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து, பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் மீண்டும் நுழைந்துள்ளார்.


பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக நேற்று அறிவித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி, "நமது பொருளாதாரத்தை சரிசெய்யவும், எங்கள் கட்சியை ஒன்றிணைக்கவும், நம் நாட்டுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கவும் விரும்புகிறேன்" என்றார்.


கரீபியன் தீவுகளில் விடுமுறையை கழித்து வந்த போரிஸ் ஜான்சன், பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்காக விடுமுறையில் இருந்து பாதியிலேயே பிரிட்டனுக்கு திரும்பினார். 100 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆதரவை பெறுவதற்காக அவர் முயற்சி மேற்கொண்டார். ஆனால், திடீரென அதிலிருந்து விலகினார்.


தன்னால் நாடாளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியை ஒருங்கிணைத்து வழிநடத்த முடியாது என போரிஸ் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விரிவாக பேசியிருந்த அவர், "என்னால் பிரதமராக வந்திருக்க முடியும். ஆனால், சுனக்கையும் பென்னி மோர்டான்டையும் தேசிய நலனுக்காக ஒன்றுசேர்க்கத் தவறிவிட்டேன். நான் நிறைய வழங்க வேண்டும் என்று நம்புகிறேன். ஆனால், இது சரியான நேரம் அல்ல என்று நான் பயப்படுகிறேன்" என்றார்.


பிரதமர் போட்டியில் இருந்து போரிஸ் விலகியது குறித்து ரிஷி சுனக் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரெக்சிட், கொரோனா தடுப்பூசியை வழங்குதல் மற்றும் உக்ரைனில் நடந்த போர் உள்ளிட்ட சில கடினமான சவால்களுக்கு மத்தியிலும் நாட்டை வழிநடத்தியதற்காக போரிஸ் ஜான்சனை பாராட்ட விரும்புகிறேன்.


அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்திருந்தாலும், அவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொது வாழ்வில் தொடர்ந்து பங்களிப்பார் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


பிரதமர் போட்டியில் இருந்து போரிஸ் விலகி இருப்பதால், ரிஷி சுனக்கின் ஒரே போட்டியாளராக பென்னி மோர்டான்ட் உள்ளார். திங்கள்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்குள், போதுமான ஆதரவை பென்னி மோர்டான்ட் பெற தவறவிட்டால் ரிஷி சுனக் தானாகவே பிரதமராகி விடுவார். அவருக்கு 29 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.