மின்னல் வேக மனிதரான உசேன் போல்ட் தனக்கும் தனது இணையர் காசி பென்னட்டுக்கும் பிறந்துள்ள இரட்டைக்குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.இதையடுத்து அந்தப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.



தடகளப் போட்டிகளில் இதுவரை யாரும் சாதிக்க முடியாத சாதனைகளைச் செய்தவர் உசேன் போல்ட். ஜமைக்கா நாட்டினைச்சேர்ந்த மின்னல் வேக மனிதர் என்று அழைக்கப்படும்  போல்ட் கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் 9.66 வினாடிகளில் 100 மீட்டர் ஓடி உலகச்சாதனை செய்தார். அத்துடன் 200 மீட்டர் பந்தயத்தில் அமெரிக்க வீரர் மைக்கேல் ஜான்சனின் 12 ஆண்டுகாலச்சாதனையாக இருந்த 19.32 வினாடிகளை் முறியடித்து 19.30 வினாடிகளில் ஓடி உலகச் சாதனைப்படைத்தவர். அதே போன்று தன் நாட்டு சகவீரர்களுடன் இணைந்து 4x100 மீட்டரை தொடர் ஓட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார்.


இத்தனை உலக சாதனைகளை எல்லாம் நிகழ்த்திய  மின்னல் வேக மனிதரான உசேன் போல்ட், தற்போது தன்னுடைய பணிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனையடுத்து நண்பர்களுடன் அவ்வப்பொழுது கிரிக்கெட் விளையாடுவது மற்றும் காதலி காசியுடன் நேரத்தைச் செலவிடுவது என மகிழ்ச்சியாக நேரத்தைக் கழித்துவருகிறார். ஏற்கனவே  உசேன் போல்ட் - காசி பென்னட் இணையருக்கு ஒலிம்பியா லைட்டிங் போல்ட் என்ற  பெண் குழந்தை  உள்ளது. இந்த நிலையில்தான்  தற்போது மீண்டும்  உசேன் போல்ட்டுக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளன. அந்தக் குழந்தைகளுக்கு  செயிண்ட் லியோ மற்றும் தண்டர் போல்ட் என பெயரிட்டுள்ளார். இந்த தகவலோடு  தனது காதலி காசி பென்னட், முதல் குழந்தை மற்றும் புதிதாக பிறந்துள்ள இரட்டைக்குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தந்தையர் தினத்தில் வெளியான உசேன் போல்ட் குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை ஜமைக்கா நாட்டின் பிரதமர் ஆன்ட்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் “ எங்கள் நாட்டின் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட்- காசி பென்னட்டிக்கு  இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளமைக்கு  வாழ்த்துகள்’ எனப் பதிவிட்டிருந்தார். ஆனால் இதுவரை உசேன் போல்ட்டிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இன்ஸ்டகிராமில் வெளியான புகைப்படங்கள் ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தன. ரசிகர்கள் போல்ட் குடும்பத்துக்கு மழைபோல வாழ்த்துகளைப் பொழிந்து வருகின்றனர். பின்னே இருக்காதா.... ஒரு குழந்தை என்றாலே கொண்டாடித்தீர்ப்பார்கள்... இங்கு இரண்டு குழந்தைகள்! சொல்லவா வேண்டும். 


WTC Finals: INDvsNZ: விடாத மழை... தொடாத பந்து... நான்காம் நாள் ஆட்டம் ரத்து!


WWE Hell in a Cell 2021: ரெஸ்ட்லிங் ரசிகர்களே, இத கவனிச்சீங்களா? எல்லாம் மாறிப்போச்சு!