சென்ற ஆண்டு மே மாதம் 25-ம் தேதி அமெரிக்காவின் மினசோடா நகரத்தை சேர்ந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு ஒரு போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த போலீஸ் அதிகாரி ஜார்ஜின் கழுத்தை தனது முட்டியை வைத்து அழுத்திய காட்சிகளும், அதனால் அவர் மூச்சுவிடமுடியாமல் தவித்த காட்சிகளும் உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.




இந்த இரக்கமற்ற நிகழ்வை கண்டித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன, இனவெறிக்கு எதிராகவும் ஜார்ஜின் இறப்புக்கு நீதிகேட்டும் மக்கள் பெரும் திரளாக கூடி போராட்டங்களை நடத்தினர். இதனை தொடர்ந்து ஜார்ஜின் குடும்பத்தினர் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 பேர் மீதும், மின்னபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் பல மாதங்கள் கழித்து தற்போது இந்த விஷயத்தில் நீதிமன்றம் ஜார்ஜ் குடும்பத்தினர் எதிர்பார்த்த தீர்ப்பை வெளியிட்டுள்ளது. 




இதையும் படிங்க : https://tamil.abplive.com/crime/tiktok-star-funbucket-bhargav-arrested-for-allegedly-raping-14-year-minor-girl-1520/amp


ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கில் டெரிக் சாவின் (Derek Chauvin) குற்றவாளி என்று தற்போது நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் தற்போது வெளியாகவில்லை என்றபோதும், அவருக்கு குறைந்தபட்சம் 40 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.






இந்த தீர்ப்பு ஜார்ஜ் பிளாய்டு குடும்பத்தினர் மட்டுமின்றி பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஹாலிவுட் உலகின் பிரபல நடிகர் கிறிஸ் எவன்ஸ், ஜார்ஜ் குடும்பத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் பல திரை பிரபலங்களும் தங்களுடைய மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். இது நிறவெறிக்கு எதிரான வெற்றி என்று ஜார்ஜின் சகோதரர் கூறியுள்ளார்.