உலகில் மனிதர்களுக்கு மிகவும் பிடித்த செல்ல பிராணிகளில் ஒன்று நாய். ஏனென்றால் அவை தங்களுடைய உரிமையாளர்களுக்கு மிகவும் விஸ்வாசமாக இருக்கும். அந்தவகையில் தற்போது விஸ்வாசமாக ஒரு நாய் ஒன்று தன்னுடைய உரிமையாளரை காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அமெரிக்காவின் நியூ ஹெம்ஷேர் பகுதியில் கடந்த 3-ஆம் தேதி இரவு ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் கார் ஒன்று டிரக் மீது மோதியுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக இருந்துள்ளது. இதன்காரணமாக அந்த விபத்து நடந்த பகுதியில் யாரும் உதவிக்கு வரவில்லை. இந்தச் சூழலில் அந்த விபத்திலிருந்து தப்பிய நாய் ஒன்று செய்த செயல் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 



இந்த விபத்தில் உயிர் தப்பிய டின்ஷிலே என்ற ஜெர்மன் ஷெப்பர்டு நாய் ஒன்று அந்த விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து சில தூரம் சென்று காவலர்கள் இருக்கும் இடத்தை தேடி சென்றுள்ளது. முதலில் இந்த நாய் வழி தவறி வந்ததாக கருதினர். எனினும் அதன்பின்னர் அந்த நாய் அவர்களை பார்த்தவுடன் தான் வந்த பாதையில் திரும்பி சென்றுள்ளது. இதை பார்த்த காவலர்கள் அந்த நாயை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அந்த நாய் சரியாக தன்னுடைய உரிமையாளரின் கார் விபத்துக்குள்ளான பகுதியை சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. 






அதன்பின்பு இந்த இடத்தில் இருந்த கார் மற்றும் டிரக் ஆகிய இரண்டிலும் இருந்த மனிதர்களை மீட்டனர். அத்துடன் இந்த விபத்தில் காயம் அடைந்த நாயின் உரிமையாளர் உட்பட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் விரைவில் நலம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. தன்னுடைய உரிமையாளருக்கு ஏற்பட்ட விபத்தை காப்பாற்ற முயன்ற நாயின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பாக பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நியூ ஹெம்ஷேர் காவல்துறை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: அமெரிக்க அணு ஆயுத கப்பலுக்கு நியமிக்கப்பட்டார் முதல் பெண் கேப்டன்..