அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்துள்ளது அந்நாட்டு உச்ச நீதிமன்றம். 50 ஆண்டுகளாக அங்கு அமலில் இருந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பது உலகம் முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பின் மூலம் இனி கருக்கலைப்பு குறித்து உத்தரவுகளை அமெரிக்காவின் மாகாணங்களே முடிவு செய்யலாம். 


அமெரிக்க கருக்கலைப்பு சட்ட வரலாறு


அமெரிக்கா உலகின் மிகவும் பழமையான ஜனநாயகமாகக் கருதப்படுகிறது. அந்த ஜனநாயக நாட்டில் கடந்த 1973 ஆம் ஆண்டு கருக்கலைப்பு என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி ஒரு பெண் 22 வாரங்கள் முதல் 26 வாரங்கள் வரையிலான கர்ப்பத்தை அவர் விரும்பினால் கலைத்துக்கொள்ளலாம்.






ஆனால் இன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இனி பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளைப் பறிக்கும். இனிமேல் கருக்கலைப்பு விதிகள் ஒரே சட்டமாக இல்லாமல் மாகாணங்களுக்கு ஏற்ப மாறுபடும். அமெரிக்க மாகாணங்களில் பாதிக்கும் மேலான மாகாணங்கள் கருக்கலைப்பு ரத்து சட்டத்தை ஆதரிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


இன்னும் சொல்லப்போனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக அமெரிக்காவின் 13 மாகாணங்கள் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தயாராகிவிட்டன எனத் தெரிகிறது. அமெரிக்காவில் கருத்தரிக்கும் வயதில் 30 மில்லியனுக்கு மேல் பெண்கள் உள்ளனர். அவர்களில் பலரும் இனி கருக்கலைப்பை அவ்வளவு எளிதாக செய்துகொள்ள முடியாது.
இந்த தீர்ப்புக்கு அமெரிக்க மாகாணங்கள் வரவேற்பு தெரிவிப்பது ஒன்றும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதற்கு முன்னதாகவும், பல கட்டங்களில் பல மாகாணங்கள் கருக்கலைப்புக்கு எதிரான தீர்ப்பை திரும்பப்பெற்றுள்ளன.


வழக்கின் பின்னணி:


அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி மாகாணம் 15 வாரங்களுக்குப் பிந்தைய சிசுவை கருக்கலைப்பு செய்வதற்கு விதித்த தடையை எதிர்த்து நடைபெற்ற டாப்ஸ் மற்றும் ஜாக்சன் மகளிர் சுகாதார அமைப்பு இடையிலான வழக்கில் தான்  உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. "கருக்கலைப்புக்கான உரிமையை அரசியலமைப்பு வழங்கவில்லை. கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களே அதிகம் கொண்ட அமர்வு, சித்தாந்த அடிப்படையில் தீர்ப்பு. கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் திரும்ப வழங்கப்பட வேண்டும்" என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதை சுட்டிக்காட்டி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 1973ல் வழங்கப்பட்ட சொந்த தீர்ப்புக்கு தலைகீழாக உள்ளது. இது பிரிவினை அரசியல் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. கருக்கலைப்பு உரிமையை பறித்துள்ளது சட்டவிரோத கருக்கலைப்புகள் ஊக்குவிக்கும் என்ற புகாரும் எழுந்துள்ளது.