மிக நீண்ட, அதிக எடை கொண்ட மலைப்பாம்பு அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதுவரை கண்டறியப்படாத அளவிற்கு நீளமான பர்மீஸ் பைத்தானை   (அதிக நீளம் வளரும் பாம்பு வகை) கண்டுபிடித்துள்ளதாக தென்மேற்கு ஃப்ளோரிடாவின் பாதுகாப்புக்குழு அறிவித்துள்ளது. இந்த பாம்பின் நீளம் சுமார் 18 அடி என்றும் சுமார் 98 கிலோ எடை கொண்டதாகவும் இந்த பாம்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.




பர்மீஸ் பைத்தான் என்ற விஷத்தன்மையற்ற பாம்பு வகை தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்ததாகும். அபாய நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் கடந்த 2009ம் ஆண்டு வரை இருந்த இந்த பாம்பு தற்போது அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதி தீவிர வேட்டையாடுதல் காரணமாக இந்த பாம்பு வகை வேகமாக அழிந்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இந்த பாம்பு வகை ஆக்கிரமிப்பு இனமாகக் கருதப்படுகிறது. இந்த பாம்பு வகையை கட்டுப்படுத்தும் வகையில் 2013ம் ஆண்டு முதல் தொடர் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஃப்ளோரிடா மாகாணத்தின் ஆய்வாளர்கள் பர்மீஸ் பைத்தான் ‘ஸ்கவுட்’ ஆண் பாம்புகளின் (ஆய்வுக்குப் பயன்படுத்தப்படும் பாம்புகள்) மீது ரேடியோ ட்ரான்ஸ் மீட்டர்களைப் பொருத்தி இப்பாம்புகளின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து வந்தனர். இந்த பாம்புகள் பெண் பாம்புகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. 




இந்த பாம்புகளின் நடவடிக்கையை கவனித்து வந்த ஆய்வாளர்கள் டியோனிஸஸ் என்று பெயரிடப்பட்ட ‘ஸ்கவுட்’ ஆண் பாம்பு இனப்பெருக்கத்திற்காக பெண் பாம்பை தேடிச் செல்வதை தொடந்தனர். அப்போது 98 கிலோ எடை மற்றும் 18 அடி நீளமும் கொண்ட பெண் மலைப்பாம்பை கண்டுபிடித்தனர். பெண் மலைப்பாம்பை கண்டு பிடித்த போது அது 122 முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்துகொண்டிருந்ததாகவும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகே அதை பிடித்து ஆய்வகத்திற்குக் கொண்டுவர முடிந்தது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அந்த பாம்பை பிடித்த சமயத்தில் அது ஒரு வெள்ளை வால் மானை முழுமையாக முழுங்கியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.


சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான வகையில் வளர்ந்து வந்த இந்த பைத்தான்களை The Conservancy’s python program மூலமாக, கடந்த 2013 முதல் தற்போது வரையிலான பத்து ஆண்டுகளில் சுமார் 11,800 கிலோ எடைகொண்ட 1,000 பைத்தான்களை ஃப்ளோரிடா மாகாணத்தில் இந்த குழு அப்புறப்படுத்தியுள்ளது.




இந்த பாம்பை ஃப்ளோரிடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்ததில் இதன் வயிற்றில் இருந்து 24 விலங்குகளின் பாகங்களும், 47 பறவைகளின் பாகங்களும், இரண்டு பாம்புகளின் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பாம்பை கொன்ற போது இதன் உயரம் ஒரு ஒட்டகச்சிவிங்கியின் உயரத்திற்கு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.




இதற்கு முன்பு 16 அடி 64 கிலோ எடைகொண்ட ஆண் பைத்தானை கண்டு பிடித்துள்ள ஆய்வாளர்கள், இவ்வளவு பெரிய பெண்பாம்பு சிக்குவது இதுவே முதன்முறை என்றும் இது சுமார் 20 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.