இலங்கையில் போராட்டம் - அமெரிக்கா ஆதரவு?
இலங்கையில் பொது மக்களால் நடத்தப்படும் போராட்டங்களை அமைதியான முறையில் நடத்துமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அறிவுறுத்தி இருக்கிறார். வன்முறை ஒருபோதும் தீர்வாகாது என குறிப்பிட்டுள்ள அவர், போராட்டம் நடத்துவது என்றால் அகிம்சை வழியில் நடத்துங்கள் என அமெரிக்கா தனது தூதர் மூலம் வலியுறுத்தி இருக்கிறது. இதன் மூலம் , இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மக்கள்தான் தீர்வை தேட வேண்டும் என்ற ஒரு அடிப்படையில் அமெரிக்கா ஆதரவு தெரிவித்து இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது. ஆகவே கோதபாய ராஜபக்ஷ அரசு மீது அமெரிக்கா எவ்வாறான கண்ணோட்டத்தை கொண்டிருக்கிறது என்பதையும் இந்த அறிவிப்பின் மூலமாக அறிய முடிகிறது.
அதேபோல் இலங்கை ராணுவத்தினருக்கும் ஒரு கோரிக்கையை அமெரிக்கா விடுத்திருப்பது உலக நாடுகளை உற்று நோக்க வைத்திருக்கிறது. அகிம்சை வழியில் போராடும் மக்களுக்கு, உரிய முறையில் பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை ராணுவத்தினருக்கும், காவல்துறையினருக்கும் அறிவுறுத்துவதாக அமெரிக்கா தெரிவித்திருப்பது தற்போது பேச்சு பொருளாகியுள்ளது. முன்பு எப்போதில்லாமல் அமெரிக்கா இம்முறை இலங்கை மக்களின் போராட்டத்தில் நேரடியாக களம் இறங்கி இருப்பதாக அரசியல் விமர்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் நிலை:
இலங்கை ராணுவத்தினர் ,காவல் துறையினர் மற்றும் பொதுமக்களுக்கான இந்த அறிவிப்பை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். வன்முறை என்பது தற்போது இலங்கை மக்களுக்கு பொருளாதார ரீதியான தீர்வை வழங்காது என அவர் தெளிவுப்படுத்தி இருக்கிறார். ஆகவே இலங்கை விஷயத்தில் அமெரிக்காவின் நிலை தற்போது வெளிப்படையாக தெரிய வந்திருக்கிறது. இலங்கையில் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசம் அடைந்து செல்லும் நிலையில் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளித்திருக்கிறது அமெரிக்கா.
பல்வேறு தரப்பினர் போராட்டம்:
இந்தப் போராட்டங்களை பொதுமக்களுடன் சேர்ந்து, இலங்கையின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் முன்னெடுத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போது இலங்கையின் இளைஞர்களை, மாணவர்களை அதிகளவில் தன் வசம் வைத்திருக்கும் எதிர்க்கட்சி தான் மக்கள் விடுதலை முன்னணி. அதன் தலைவர் தான் அனுரகுமார திசாநாயக்க, இவர் தான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர், அதிபர் கோதபாய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவியை துறந்து செல்ல வேண்டுமென தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாக அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில் இலங்கையில் இருக்கும் அமெரிக்க தூதர் ஜூலி சாங், கடந்த மாதம் அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து பேசி இருந்தது இலங்கை அரசியலில் பரபரப்பு பொருளாக பேசப்பட்டது.
இலங்கையில் தற்போது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய கட்சியாக இருப்பது மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ஏனைய தமிழ் கட்சிகள் போன்றன மக்களோடு இணைந்து போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது. இலங்கையில் இருக்கும் பெரும்பான்மையான புத்த துறவிகள், இளைஞர்கள், மக்கள் விடுதலை முன்னியில் அதிக அளவில் அங்கம் வகிக்கின்றனர். இலங்கைக்கான அமெரிக்க தூதர் கூட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த பிறகு பல்வேறு கருத்துக்களை ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் தற்போது உள்ள ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படுமாயின் அநுரகுமார திசாநாயக்கவுக்கு பெரும்பாலான ஆதரவு கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாகவே அரசியல் வல்லுனர்களின் கருத்தாகவும் இருக்கிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை சரி செய்வதற்கு அமெரிக்கா முயற்சிகளை எடுத்து வருவதாகவும் இலங்கைக்கான தூதுவர் தெரிவித்திருக்கிறார். முன்னதாக ஐநாவில், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது இனவழிப்பு நடைபெற்றது என போராடிய தமிழ் மக்களுக்கு சார்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது சர்வதேச அளவிலான விசாரணைக்கு ஆஜராகுமாறு இலங்கையின் அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்சவுக்கும், பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபய ராஜபக்சவுக்கும் ஐக்கிய நாடுகள் சபை மூலம் வலியுறுத்தப்பட்டது .
பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை:
ஆனால் இருவரும் ஆஜராகாமல் தவிர்த்து வந்தனர், அப்போது இலங்கையில் இன அழிப்புதான் நடைபெற்றது என ஆதரித்து தீர்மானம் வெற்றி பெற வாக்களித்த நாடுகள், இலங்கை மீது பொருளாதார தடையை கொண்டு வர வேண்டும் என கூறினர். இந்நிலையில் யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை தன்னைத்தானே பொருளாதார ரீதியாக நெருக்கடிக்குள் சிக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆனால் இதில் பாதிக்கப்பட்டுள்ளது அப்பாவி மக்கள் தான். இலங்கையின் போராட்ட களம் என்பது போர்க்களமாக மாறுமா என்பது இலங்கை அரசியல்வாதிகளின் கைகளில் தான் இருக்கிறது