அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்தத் துப்பாக்கி சுடுதல் சம்பவத்தில் சிலர் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சியாட்டில் நகரில் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
அலறிய மக்கள்:
அமெரிக்காவின் வாஷிங்டனில் சியாட்டில் நகரம் உள்ளது. இந்த நகரம் எப்போதும் ஒரு பரபரப்பாகவே இருக்கும். சியாட்டில் ரெய்னர் பீச் பகுதியில் உள்ள சேஃப்வே என்ற ஒரு கடையில் சமூக பாதுகாப்பு தொடர்பான ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இசை நிகழ்ச்சி, நடனம், இலவச உணவு என மக்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். அப்போது, திரளான மக்கள் கூடியிருக்க, அங்கு துப்பாக்கி ஏந்தி ஒருவர் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார். துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் அங்கிருந்த மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். துப்பாக்கி சத்தத்தை கேட்ட மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். சிலர் அந்நிகழ்ச்சிக்காக போடப்பட்டிருந்த மேடைக்கு அடியிலும், அருகில் இருக்கும் அறைகளில் ஒளிந்துக் கொண்டிருந்தனர். இருப்பினும், அந்த மர்ம நபர் கண்ணில் தேன்பட்டவர்களை எல்லாம் குருவியை சுடுவது போல் சுட்டுத் தள்ளினார்.
7 பேர் படுகாயம்:
மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பலத்த காயம் ஏற்பட்டவர்களில் 4 ஆண்களும், 1 பெண்ணும் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து படுகயாமடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் ஹார்பர்வியூ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "மர்ம நபர் ஒருவர் முதலில் சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதன்பின், அருகில் நடந்துக் கொண்டிருந்த நிகழ்ச்சிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்” என்றார்.